“முதல் தடவையாக பார்க்கிறேன் இந்தப் பறவை அழகாக இருக்கின்றது இதன் பெயர் மகாராணி பறவை என்று பெயர் வைக்கலாம்” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், பல வண்ணங்களுடன் அழகிய தோற்றத்தில் இரு பறவைகள் மரக்கிளையில் நிற்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இப்பறவை உண்மை என்று கூறி பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Ai Pulse என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் காணொலி கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி ஷார்ட்ஸாக பதிவிடப்பட்டுள்ளது. அதில், வலதுபுறம் உள்ள பறவையை இடதுபுறமாகவும் இடதுபுறம் இருக்கும் பறவையை வலதுபுறமாகவும் மாற்றி எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிந்தது. அதேசமயம், காணொலியை கூர்ந்து ஆராய்கையில் சில பகுதிகளில் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் காணொலியில் காணப்படும் சிதைவுகள் இருப்பதை நம்மால் அறியமுடிந்தது.
காணொலியில் காணப்படும் சிதைவுகள்
மேலும், பதிவிடப்பட்டுள்ள காணொலியின் டிஸ்க்ரிப்ஷன் பகுதியில், “ஒலி அல்லது காட்சிகள் கணிசமாக திருத்தப்பட்டுள்ளது அல்லது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் Ai Pulse யூடியூப் சேனலில் வைரலாகும் காணொலியைப் போன்று பல வித்தியாசமான பறவைகளை AI தொழில்நுட்பத்தால் உருவாக்கி பதிவிட்டுள்ளது. இவற்றைக் கொண்டு வைரலாகும் காணொலியும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. மேலும், இக்காணொலியை உருவாக்கிய Ai Pulse யூடியூப் சேனலை குறுஞ்செய்தி வாயிலாக தொடர்புகொண்டு இக்காணொலி குறித்து கேட்டபோது, வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்று உறுதி அளித்தனர்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக பல வண்ணங்களுடன் அழகிய தோற்றத்தில் இரண்டு பறவைகள் உண்மையில் இருப்பது போன்று வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.