பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஆதன் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாக பகிரப்படுகிறது. அதில் பேசும் அவர், “2013ல் காங்கிரஸ் ஒரு மசோதாவை தாக்கல் செய்ய முயற்சித்தது. அதனை பாஜக கடுமையாக எதிர்த்தது. வன்முறைக்கு எதிரான மசோதா. அந்த மசோதாவின் கான்செப்ட் என்னவென்று தெரியுமா? இந்தியாவில் எங்கு கலவரம் நடந்தாலும், இந்துக்கள் மீது மட்டுமே FIR போட முடியும். கிருஸ்தவர்கள் மீதோ இஸ்லாமியர்கள் மீதோ FIR-ரே போடக்கூடாது. இப்படி ஒரு மசோதா தாக்கல் செய்தனர். தெரியுமா உங்களுக்கு, Anti-Violence Bill 2013.
இதைவிட கேடுகெட்ட, காட்டுமிராண்டித்தனமான, ஒருதலை பட்சமான, மோசமான ஒரு சட்டத்தை உலகத்தில் நீங்கள் எங்காவது காட்ட முடியுமா? இந்தியாவில் வேண்டாம். உலகத்தில் எங்காவது காட்டிட முடியுமா? ஒரு கலவரம் நடந்தால் இந்துக்கள் மீது மட்டும் வழக்கு பதிய வேண்டும். கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது வழக்கே பதிய கூடாது. கொலையே நடந்து இருந்தாலும் வழக்கு பதியக்கூடாது" என்று பேசியிருந்தார்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இவர் கூறும் தகவல் தவறானது என்றும் அவ்வாறாக அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரியவந்தது.
இது குறித்த உண்மையை கண்டறிய Anti Violence Bill 2013 என்ற மசோதா குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இதன் பெயர் Prevention of Communal Violence (Access to Justice and Reparations) Bill - 2014 என்பது தெரியவந்தது. தொடர்ந்து, தேடியபோது, 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி The Hindu வெளியிட்டுள்ள செய்தியின் படி, எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பை அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது என்று தெரிய வந்தது.
தொடர்ந்து இந்த மசோதா பதிவிறக்கம் செய்து அதனை ஆராய்கையில், ஜாதி, மதக்கலவரங்களை ஒடுக்கவும் திட்டமிட்டு சமூகத்தில் விளிம்புநிலையில் இருப்பவர்களை தாக்கும் செயல்களை தடுப்பதே இம்மசோதாவின் நோக்கம் என்று தெரியவந்தது.
மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள group பரிவு
மேலும், ஒருவர் எந்த அடையாளத்தை உடையவர் (group) என்பதை வைத்து திடீரெனவோ அல்லது முன் திட்டமிடலுடனோ அவருக்கு எதிராக நடத்தப்படும் செயல்கள் மற்றும் அதனால் ஏற்படும் தனிப்பட்ட மற்றும் பொருளாதார இழப்புகள் மற்றும் அதன் மூலமாக தேசத்தின் மதசார்பற்ற தன்மையை சிதைத்தல் என்பதை “communal and targeted violence” என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும், மசோதாவில் பிரிவு (e) படி ‘group’ என்பதற்கு ஒரு மாநிலத்தில் இருக்கும் மத சிறுபான்மையினர், மொழி சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின் தந்தவர்கள் (SC) மற்றும் பழங்குடியினர்கள் (ST) என்று விளக்கப்பட்டுள்ளது. இதில் மத சிறுபான்மையினர் தவிர்த்து மற்ற மூன்று பிரிவுகளில் இருக்கும் மொழி சிறுபான்மையினர் மற்றும் SC/ST மக்களும் இந்துக்கள் தான் என்பதை நம்மால் அறியமுடிகிறது.
அஸ்வத்தாமன் கூறுவதுபோல, கிருஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் எந்த குற்றம் செய்தாலும் அவர்கள் மீது FIR போடக்கூடாது என்று இருப்பதகாவும், அவர்கள் கொலையே செய்தாலும் வழக்கு பதியக்கூடாது என்று இருப்பதாகவும் இந்துக்கள் மீது மட்டுமே வழக்கு பதிய வேண்டும் என்று சட்ட மசோதா சொல்வதாகவும் அந்த மசோதாவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் கலவரம் நடந்தால் இந்துக்கள் மீது மட்டும் வழக்கு பதிய வேண்டும். கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது வழக்கே பதிய கூடாது என்று காங்கிரஸ் 2013 ஆம் ஆண்டு மசோதா தாக்கல் செய்ததாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கூறியது தவறான தகவல் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.