இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக உள்ளவர் மல்லிகார்ஜுன் கார்கே. இவரை ராகுல் காந்தி கட்சி நிகழ்சியில் அவமதித்ததாக கூறி சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், கார்கே அமர்ந்திருக்கும் இருக்கையை ராகுல் காந்தி நகர்த்துவது போன்று காட்சி பதிவாகியுள்ளது. இதன்மூலம் கார்கேவை ராகுல் காந்தி வெளியேறச் சொன்னதாக கூறி இக்காணொலியை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் கார்கே பேசுவதற்காக எழுந்த போது அவருக்கு ராகுல் காந்தி உதவி செய்ததை தவறாக பரப்பி வருகின்றனர் என்று தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஜனவரி 15ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தின் திறப்பு விழா குறித்த பதிவு ஒன்றை ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் மல்லிகார்ஜுன் கார்கே அணிந்துள்ள உடையும் வைரலாகும் காணொலியில் அவர் அணிந்துள்ள உடையும் ஒன்றாக இருப்பதை நம்மால் காண முடிந்தது. மேலும், சோனியா காந்தி மற்றும் கார்கே இருவரும் இணைந்துதான் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளனர் என்பது அவரது பதிவின் மூலம் தெரியவந்தது.
தொடர்ந்து, திறப்பு விழா தொடர்பான காணொலியை யூடியூப் பக்கத்தில் தேடிய போது, கடந்த ஜனவரி 15ஆம் தேதி டெல்லியில் துவக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகமான “இந்திரா பவன்” திறப்பு விழா குறித்து நேரலை காட்சி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருந்தது.
அதில், 46:30 பகுதியில் வைரலாகும் காணொலியில் இருக்கும் பகுதி இடம்பெற்றுள்ளது. ராகுல் காந்தி பேசி முடித்ததும் மல்லிகார்ஜுன கார்கேவை பேச அழைக்கின்றனர். அவர் எழுந்து பேச வருவதற்கு ஏதுவாக ராகுல் காந்தி நாற்காலியை நகர்த்தி உதவி செய்துள்ளார். வலதுசாரியினர் இப்பகுதி காணொலியை மட்டும் எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கட்சி நிகழ்சியில் அவமதிக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் பேசுவதற்காக எழுந்த கார்கேவை நாற்காலியிலிருந்து எழுந்துகொள்ள ராகுல் காந்தி கூறியதை தவறாகத் திரித்துப் பரப்புகின்றனர் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.