தொலைக்காட்சித் தொகுப்பாளரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவருமான மணிமேகலை, ஹுசைன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட போது, "நானும் ஹுசைனும் திருமணம் செய்துகொண்டோம், காதலுக்கு மதமில்லை" என மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் மணிமேகலை பதிவிட்டுள்ளார். இந்நிலையில், இவர் மதம் மாறி உள்ளதாகவும், இது லவ் ஜிகாத் என்றும் வலது சாரியினர் பலரும் சமூக வலைதளங்களில்(Archive link) பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதற்காக புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2017ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி வைரலாகும் டுவிட்டர் பதிவை மணிமேகலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நானும் ஹுசைனும் திருமணம் செய்துகொண்டோம். காதலுக்கு மதம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 2020ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி "ஈத் முபாரக்" என்று இஸ்லாமிய ஆடையுடன் ஹூசைன் மற்றும் மணிமேகலை தம்பதியர் டுவிட்டரில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அப்பதிவில், "எப்படியோ ஒரு வழியாக மதம் மாற்றி விட்டான். இதற்கு பெயர் தான் லவ் ஜிகாத்” என்று ஒரு டுவிட்டர் பயனர் கமெண்ட் செய்திருந்தார்.
மணிமேகலையின் பதில்
அதற்கு, ”ஹேப்பி ரம்ஜான் சொல்றதுக்கு எல்லாம் மதம் மாறிட்டு தான் சொல்லணுமா? யாரும் இங்க கன்வெர்ட் ஆகல. ஹூசைன் என்னுடன் கோவிலுக்கு வருகிறார், நாங்கள் ரம்ஜானையும் கொண்டாடுகிறோம். நாங்கள் இருவரும் தெளிவாக இருக்கிறோம். உங்கள் குழப்பங்களை இங்க கொண்டு வராதீங்க ப்ளீஸ். நன்றி” என்று மணிமேகலை பதிலளித்துள்ளார். இதனை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், சமயம் தமிழ், இந்தியா கிளிட்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் செய்தியாகவும் வெளியிட்டுள்ளன.
Conclusion:
நமது தேடலின் முடிவாக தொகுப்பாளர் மணிமேகலை மதம் மாறினார் என்று பரவும் செய்தி வதந்தி என்றும் அவர் மதம் மாறவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.