ஒடிசா ரயில் விபத்து: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் விபத்து பகுதிக்குச் சென்றனரா?

ஒடிசா ரயில் விபத்து பகுதிக்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சென்றதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  3 Jun 2023 8:24 AM GMT
ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஒடிசா ரயில் விபத்து பகுதிக்குச் சென்றனரா

ஒடிசா மாநிலம் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து நாட்டையே உளுக்கி உள்ளது. இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், "ஒடிசா பாலாசோர் இரயில் விபத்து களத்தில் RSS ஸ்வயம்சேவகர்கள். அப்பகுதி RSS மாவட்ட இணை அமைப்பாளர் திரு.விஷ்ணு தலைமையில் 25 ஸ்வயம்சேவகர்கள் நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோரமண்டல் இரயிலில் பயணித்தவர்கள் உறவினர் அவசர தகவலுக்கு திரு.விஷ்ணுவை அனுகவும் – 94398 61204. Also, Railway Emergency Control Room Number of Balasore – 06782262286 !" என்று தகவலுடன் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் விபத்து களத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வைரலாகும் புகைப்படம்

Fact-check:

இத்தகவலின் உண்மைத் தன்மையைக் கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பிப்ரவரி 13ஆம் தேதி 2015ஆம் ஆண்டு Shreeharsha Perla என்பவர் "ஆனேக்கலில் நடந்த ரயில் விபத்துப் பகுதிக்கு விரைந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்" என்ற கேப்ஷனுடன் தற்போது வைரலாகும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Shreeharsha Perla-வின் டுவிட்டர் பதிவே

மேலும், Friends of RSS என்ற டுவிட்டர் பக்கமும் இதே புகைப்படத்தை பிப்ரவரி 12ஆம் தேதி 2018ஆம் ஆண்டு பதிவிட்டுள்ளது‌. தொடர்ந்து, ஆனேக்கல் ரயில் விபத்து குறித்து தேடுகையில், கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் பகுதியில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக டான் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. அதே போன்று, விஷ்வ சம்வத கேந்திராவின் அதிகாரப்பூர்வ இணையதளமான சம்வதாவில், ஆனேக்கல் ரயில் விபத்தின் போது மீட்பு பணியில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் ஈடுபட்டதாக 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வைரலாகும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது.

Friends of RSS-ன் டுவிட்டர் பதிவு

இறுதியாக, ரயில் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மருத்துவக் குழுவுடன் 20 முதல் 25 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் செல்வதாக மேற்கு வங்கம் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளதாக நேற்று(ஜூன் 2) UNI India இணையதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

Conclusion:

நமது தேடலின் முடிவாக, ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு 20 முதல் 25 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் செல்வதாக மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவர் கூறி உள்ளார். இந்நிலையில், களத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒடிசாவில் எடுக்கப்பட்டது இல்லை என்றும் அவை 2015ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:A photo claiming that RSS workers went for rescue at the Coromandel express accident site
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Twitter
Claim Fact Check:False
Next Story