மிக்ஜாம் புயலால், தத்தளித்துக் கொண்டிருக்கும் சென்னை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மழை பாதிப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். பின்னர் சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த போது 47 ஆண்டுகளில் காணாத மழையை இந்த ஆண்டு கண்டுள்ளோம் எனக் கூறிய முதலமைச்சர், “4,000 கோடி ரூபாய் பணிகள் செய்தும் சென்னை மிதப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் 4,000 கோடி ரூபாய்க்கு திட்டப்பணிகள் செய்ததால்தான் சென்னை தப்பித்ததாகவும்” தெரிவித்தார்.
இந்நிலையில், “இந்த முதலைக்கு என்ன பேர் வைக்கலாம் மக்களே. குறிப்பு : அந்த 4000 கோடியை பற்றி யாரும் பேசக்கூடாது.” என்று வெள்ள நீரில் முதலை புகுந்தது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மையைக் கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி 9gag என்ற இணையதளத்தில், “தாய்லாந்தின் வெள்ளப் பகுதியில் ஒரு முதலை நீந்துகிறது” என்ற தகவலுடன் வைரலாகும் அதே புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
அதேபோன்று, Thailand என்ற ரெட்டிட் பயனரும், “தாய்லாந்தின் சுகும்விட் பட்டாயாவில் வெள்ளம்” என்ற கேப்ஷனுடன் வைரலாகும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், உண்மையில் சென்னை வெள்ளத்தின் போது முதலை புகுந்ததா என்று இணையத்தில் தேடினோம். அப்போது, “விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளியாகி உள்ளது!” என்று கடந்த டிசம்பர் 4ஆம் தேதி சன் நியூஸ் எக்ஸ் தளத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தது. முதலை தொடர்பாக இந்த ஒரு செய்தி மட்டுமே வெளியாகியுள்ளது. குடியிருப்புக்குள் முதலை வந்ததாக எந்த ஒரு செய்தியும் பதிவாகவில்லை.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சென்னை வெள்ள நீரில் குடியிருப்பு பகுதிக்குள் முதலை புகுந்ததாக வைரலாகும் புகைப்படம் உண்மையில் தாய்லாந்து வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது