சைப்ரஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கியதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், பெண் ஒருவர் பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் பிரதமர் மோடியின் காலில் விழுந்த பெண் நிக்கோசியா நகர்மன்ற உறுப்பினர் என்று தெரியவந்தது.
வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஜூன் 16ஆம் தேதி Times of India “பிரதமரின் சைப்ரஸ் பயணத்தின் போது நிக்கோசியா கவுன்சில் உறுப்பினர் மோடியின் கால்களைத் தொட்டு வணங்கினார்” என்ற தலைப்பில் வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.
Times of Indiaவில் வெளியிட்டுள்ள செய்தி
அதன்படி, பிரதமர் நரேந்திர மோடியின் சைப்ரஸ் பயணத்தின் போது, நிக்கோசியாவின் கவுன்சில் உறுப்பினரான Michaela Kythreoti Mhlapa, மோடியின் கால்களைத் தொட்டு தனது மரியாதையை வெளிப்படுத்தினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Doordarshan ஊடகமும் அதே தேதியில் வெளியிட்டுள்ளது. அதிலும், மோடியின் காலை தொட்டு வணங்கியவர் நிக்கோசியாவின் கவுன்சில் உறுப்பினர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கிடைத்திருக்கும் ஆதாரங்களைக் கொண்டு முதற்கட்டமாக அப்பெண் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்று தெரியவந்தது.
Nicosia municipality இணையதளம்
தொடர்ந்து, Michaela Kythreoti Mhlapa குறித்து தேடிய போது, இவர் நிக்கோசியா நகர்மன்றத்தின் உறுப்பினர் என்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சைப்ரஸ் பாராளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி Attalides Alexandra என்பவரே நிக்கோசியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்றும் தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சைப்ரஸ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பிரதமர் நரேந்திர மோடியின் கால்களை தொட்டு வணங்கியதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் அதில் இருப்பவர் நிக்கோசியா நகர்மன்றத்தின் உறுப்பினர் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படுகிறது.