Fact Check: தமிழ்நாடு அரசுப் பள்ளியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றதா? உண்மை என்ன

தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

By Ahamed Ali  Published on  18 March 2025 7:34 PM IST
Fact Check: தமிழ்நாடு அரசுப் பள்ளியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றதா? உண்மை என்ன
Claim: ஆடலும் பாடலும் நிகழ்ச்சி தமிழ்நாடு அரசுப் பள்ளியில் நடைபெற்றது
Fact: இத்தகவல் தவறானது. அதில் நடனமாடுபவர்கள் பள்ளி மாணவர்கள் கிடையாது, தொழில்முறை நடனக் கலைஞர்கள்

தமிழ்நாடு அரசுப் பள்ளியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறி சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், நடிகர் தனுஷ் நடித்து வெளியான ‘மூனு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணழகா காலழகா…’ பாடலுக்கு அரசு பள்ளி சிரூடை அணிந்த ஜோடி நடனமாடும் காட்சி பதிவாகியுள்ளது. திமுக ஆட்சியில் இத்தகைய அவலம் என்று கூறி இதனை பரப்பி வருகின்றனர்.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் கோயில் திருவிழாவின் போது நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சி என்று தெரியவந்தது.

இத்தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய வைரலாகும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, “கண்ணழகா காலழகா.. சாங் | 3 movie சூப்பர் டான்ஸ் | டைட்டானிக்-வெள்ளலூர் 2025” என்ற தலைப்புடன் கடந்த மார்ச் 5ஆம் தேதி Pudugai pugal prem என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் அதே காணொலி வெளியிடப்பட்டிருந்தது. இதனை ஆய்வு செய்தபோது வைரலாகும் காணொலியில் உள்ள ஜோடியே இதிலும் ஆடுவது தெரியவந்தது.

மேலும், வைரலாகும் காணொலியில் ஆடக்கூடிய ஜோடிக்கு பின்னால் காண்பிக்கப்படும் ஹார்ட் மற்றும் பட்டாம்பூச்சி வடிவங்கள் யூடியூப் சேனல் வெளியிட்டிருந்த காணொலியிலும் இடம்பெற்றிருந்தன. இவற்றைக் கொண்டு இரண்டும் ஒரே குழுவினர் என்பது தெரியவந்தது.

யூடியூப் சேனல் வெளியிட்டிருந்த காணொலியின் 51வது நொடியில்Titanic Dance Academy” என்ற பேனர் இடம் பெற்றிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்து இது தொடர்பாக விசாரித்தது நியூஸ்மீட்டர். அப்போது, “நாங்கள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கலைக்குழுவினர். வைரலாகும் காணொலியில் நடனம் ஆடுபவர்கள் தொழில்முறை நடனக் கலைஞர்கள் தான், பள்ளி மாணவர்கள் கிடையாது. இப்பாடலுக்கும் நடனம் ஆடியவர்கள் “ஜே ஜே பாய்ஸ்” என்கிற தஞ்சாவூரைச் சேர்ந்த நடனக் குழுவினர். இதே விளக்கத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அளித்துள்ளோம்” என்றனர்.


புகைப்பட ஒப்பீடு

தொடர்ந்து “ஜே ஜே பாய்ஸ்” நடனக் குழுவினரை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த தொலைபேசி எண் உதவியுடன் தொடர்பு கொண்டது நியூஸ் மீட்டர். அப்போது அக்குழுவின் தலைவரான ஜில்லு இதுகுறித்து விளக்கினார். அதன்படி, “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நாங்கள் நடனமாடிய போது எடுக்கப்பட்ட காணொலி தான் தற்போது தவறாக பரவி வருகிறது.

“மூனு” திரைப்படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் பள்ளி மாணவர்களை போன்று நடித்திருந்ததால் நாங்களும் அதே போன்று சீருடை அணிந்து நடனம் ஆடினோம். இதற்கென்று பிரத்தியேகமாக போட்டோ ஷூட் நடத்தி இத்தகைய நடனத்தை ஆடினோம்” என்றார் விளக்கமாக.

Conclusion:

முடிவாக நம் தேடலில் தமிழ்நாடு அரசுப் பள்ளியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அவர்கள் தொழில்முறை நடனக் கலைஞர்கள் என்றும் பள்ளி மாணவர்கள் இல்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:தமிழ்நாடு அரசு பள்ளியில் நடைபெற்ற ஆடலும் பாடலும் நிகழ்ச்சி
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:Misleading
Fact:இத்தகவல் தவறானது. அதில் நடனமாடுபவர்கள் பள்ளி மாணவர்கள் கிடையாது, தொழில்முறை நடனக் கலைஞர்கள்
Next Story