“பாஜக ஊழலை வெளிப்படுத்துவேன். ஜெயில் கைதி கெஜ்ரிவால். போட்டான்பார் ஒரு போடு நம்ம ஆளு” என்ற கேப்ஷனுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருவர் கன்னத்தில் தாக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2019ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி Hindustan Times தனது யூடியூப் சேனலில் வைரலாகும் காணொலியை பதிவிட்டு இருந்தது. அதில், “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மோதி நகர் பகுதியில் ரோடு ஷோ நடத்திய போது இச்சம்பவம் நடைபெற்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2019ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி இது தொடர்பாக விரிவான செய்தியை ABP ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில், "2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டிருந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அதன் ஒரு பகுதியாக நேற்று (மே 4, 2019) டெல்லி மோதி நகர் பகுதியில் ரோடு ஷோ நடத்திய அரவிந்த் தெஜ்ரிவாலை 33 வயதான சுரேஷ் என்பவர் கெஜ்ரிவால் பயணித்த வாகனத்தின் மீது ஏறி அவரை கன்னத்தில் தாக்கினார். இது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
அதே ஆண்டு மே 10ஆம் தேதி Deccan Chronicle வெளியிட்டுள்ள செய்தியின்படி, “முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏன் தாக்கினேன் என்று தெரியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன் என்று அவரைத் தாக்கிய சுரேஷ் கூறினார்” என்று குறிப்பிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருவர் தாக்குவது போன்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.