“சத்திரிய சிகாமணி ராமன். தமிழக மக்கள் ஒருங்கிணைந்து இது ஆன்மீக மண் என்று நிரூபித்த தருணம்..... இடம் கும்பகோணம்” என்ற கேப்ஷனுடன் கோயிலுக்குள் பக்தர்கள் பலரும் தீபம் ஏற்றும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்நிகழ்வு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று நடைபெற்றதாக கூறி பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இக்காணொலியின் உண்மைத்தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி இதே காணொலி Namma Arcot நம்ம ஆற்காடு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “நம்ம ஆற்காடு ரத்தினகிரி பாலமுருகன் கோவில் மக்கள் வெள்ளத்தில் ஜோதியுடன் தெப்பக்குளம் ஒளிரும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது
முதற்கட்டமாக, கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில் வைரலாகும் காணொலி பழையது என்றும் காணொலியில் தீபம் ஏற்றப்படும் நிகழ்வு ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி முருகன் கோயிலில் நடைபெற்றது என்றும் கூற முடிகிறது.
தொடர்ந்து, இது குறித்து யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, “பாலமுருகன் கோயிலில் தெப்பக்குளம் திறப்பையொட்டி சிறப்பு பூஜை” என்று 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாக தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அதன் 26வது நொடியில் வைரலாகும் காணொலியில் இருப்பது போன்றே பக்தர்கள் கூட்டம் தீபம் ஏற்றும் காட்சி பதிவாகியுள்ளது.
மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது, “இது ரத்தினகிரி முருகன் கோயிலில் உள்ள நட்சத்திர தெப்பக்குளம்” என்று உறுதிப்படுத்தினார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று கும்பகோணத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றியதாக வைரலாகும் காணொலி உண்மையில் ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள முருகன் கோயில் நடைபெற்ற நிகழ்வு என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.