"இந்து கடவுளான பிரம்மன், தன் சொந்த மகளான சரஸ்வதியை திருமணம் செய்தது போல் தானும் தன் சொந்த மகளை திருமணம் செய்ததாக தெரிவித்தார் பிராமண பண்டிட்." என்ற தகவலுடன் 9 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கரன் கோட்னாலா என்பவருடைய யூடியூப் சேனலில் 17 வயது பெண் 62 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டார் என்று ஹிந்தி தலைப்புடன் 8 நிமிடம் 13 விநாடிகள் ஓடக்கூடிய முழுநீள காணொலி கடந்த டிசம்பர் 21-ம் தேதி பதிவேற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும், அக்காணொலியின் டிஷ்கிரிப்ஷன் பகுதியில், இது பொழுதுபோக்கிற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. இதில் காட்டப்பட்டுள்ள அனைத்து நபர்களிடமிருந்தும் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று விளக்கி உள்ளனர். அதேபோன்று, காணொலியின் 37-வது நொடியில், இதில் உள்ள கன்டென்ட் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே கருதப்பட வேண்டும் என்று பொறுப்பு துறந்துள்ளனர். இவரது யூடியூப் சேனலில் தொடர்ச்சியாக பல்வேறு பிராங்க் காணொலிகள் பதிவிடப்பட்டுள்ளதையும் நம்மால் காண முடிகிறது.
வைரல் காணொலியின் யூடியூப் டிஷ்கிரிப்ஷன்
தொடர்ந்து தேடுகையில், 62 வயது பண்டிட் தனது மகளை திருமணம் செய்து கொண்டார்(மொழிபெயர்ப்பு) என்று Troll என்ற டுவிட்டர் பக்கம் இக்காணொலியின் ஸ்கிரீன்ஷாட்டுடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. இப்பக்கத்தின் அடிப்படையிலேயே தவறான தகவலுடன் தற்போது காணொலி வைரலாகி வருவதை நம்மால் அறிய முடிகிறது.
Conclusion:
நமது தேடலின் மூலம் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்ட காணொலி ஒன்றை உண்மையில் நடைபெற்றது போன்று தவறாக சித்தரித்து பரப்பி வருகின்றனர் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.