"புதிய வகை தொழில்நுட்பத்துடன் மாரடைப்பை நேரடியாக நீக்கலாம். 5 ஆயிரம் செலுத்தி மும்பை ஜே. ஜே. மருத்துவமனையில் இச்சிகிச்சையை மேற்கொள்ளலாம்" என்று 1 நிமிடம் 24 விநாடிகளும் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய முதலில் காணொலியை முழுமையாகப் பார்த்தபோது, இன் தி நவ் என்ற சமூக ஊடகம் வெளியிட்டு காணொலி என்பது தெரியவந்தது. மேலும் அதில், "சைட்டோஸ்பான்ஜ்(Cytosponge) என்ற புதிய வகை மருத்துவ உபகரணம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. மாத்திரை வடிவிலான சைட்டோஸ்பான்ஜை விழுங்கினால் வயிற்றினுள் மாத்திரை கரைந்து அதில் இருக்கக்கூடிய ஸ்பான்ஜ் விரிந்து உணவுக்குழாயில் இருக்கக்கூடிய சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட செல்களை ஸ்பான்ஜ் கிரகித்துக்கொள்ளும். அதன் மறுமுனையில் இணைக்கப்பட்டுள்ள அதாவது வாய்க்கு வெளியே உள்ள நூலைக் கொண்டு ஸ்பான்ஜை வெளியே எடுத்துக்கொள்ளலாம். இதனைக்கொண்டு உணவுக்குழாய் புற்றுநோயைக் கண்டறியலாம்" என்று காணொலியில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கூகுளில் தேடுகையில், சைட்டோஸ்பான்ஜ் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டனைச் சேர்ந்த ரிஃப்லக்ஸ்(Reflux) தனது இணையதளத்தில், "நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு எண்டோஸ்கோப்பிற்கு மாற்றமாக சைட்டோஸ்பாஜ் உதவியுடன் உணவுக்குழாய் புற்றுநோயைக் கண்டறிய உதவியாக இருக்கும். பயாப்சி இன்றி மயக்கம் அளிக்காமல் இதனை செய்துகொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து கடந்த ஜனவரி 27ம் தேதி நர்சிங் டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "இங்கிலாந்தில் முதல்முறையாக யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் சைட்டோஸ்பான்ஜ் பயன்படுத்தப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து அங்கு நிரந்தர நடைமுறையாக மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, நார்ஃபோக் மற்றும் நார்விச் மருத்துவ பல்கலைக்கழக செவிலியர்கள் இதனை பயன்படுத்தி உள்ளனர்." என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மும்பை ஜே. ஜே. மருத்துவமனையில் 5 ஆயிரத்துக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என்று கூகுளில் தேடிய போது, "அப்படி பரவும் தகவல் பொய்யானது. ஆஞ்சியோகிராபி சிகிச்சை மேற்கொள்ள 40 முதல் 50 ஆயிரம் வரை ஆகும்" என்று ஜே. ஜே. மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் பன்சால் மும்பை லைவ் என்று இணையதளத்திற்கு விளக்கம் அளித்த தகவலும் கிடைத்தது.
Conclusion:
இறுதியாக, நமக்கு கிடைத்து இருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் வைரலாகும் தகவல் மாரடைப்பு தொடர்பானது அல்ல, அது உணவுக்குழாய் புற்றுநோய் தொடர்பான காணொலி என்றும் ஜே.ஜே மருத்துவமனையில் 5 ஆயிரத்துக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.