இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சென்றார். அமெரிக்காவின் புதிய அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் நேற்று (பிப்ரவரி 14) சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். இதனைத் தொடர்ந்து மோடி மற்றும் ட்ரம்ப் ஆகியோர் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அப்போது, இந்திய பத்திரிக்கையாளர் மோடியை புகழ்ந்து பேசும்போது அவருக்கு பின்னால் இருந்த அமெரிக்க செய்தியாளர் இந்திய செய்தியாளரை கேலி செய்வதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ்மீட்டர் நடத்திய ஆய்வில் இந்நிகழ்வு 2020ஆம் ஆண்டு நடைபெற்றது என்று தெரியவந்தது.
இத்தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி India Times செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “நியூயார்க் போஸ்ட் பத்திரிகையாளர் எபோனி பௌடன் இந்திய பத்திரிகையாளரை கேலி செய்வது போல் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இக்காணொலியை @damonimani என்ற ட்விட்டர் (எக்ஸ்) பயனர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், தொடர்ந்து அக்காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எபோனி பௌடனின் இத்தகைய செயல் இந்தியர்களை கோபமடையச் செய்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பாக India Today வெளியிட்டுள்ள செய்தியின் படி, இந்நிகழ்வு பிப்ரவரி 26 அன்று வாஷிங்டன் டிசியின் வெள்ளை மாளிகையில் கரோனா வைரஸ் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது நடைபெற்றது. மேலும், அதில் அமெரிக்க பத்திரிகையாளர் கேலி செய்யக்கூடிய இந்திய பத்திரிக்கையாளரின் பெயர் ரகுபீர் கோயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவாக நம் தேடலில் மோடியை புகழ்ந்து பேசிய இந்திய பத்திரிக்கையாளரை பார்த்து அமெரிக்க பத்திரிகையாளர் கேலியாக சிரிப்பதாக வைரலாகும் காணொலி 2020ஆம் ஆண்டு கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அதிபர் டொனாட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது எடுக்கப்பட்ட காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.