தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் பாஜக நிர்வாகி கே. டி. ராகவன் காலில் விழுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு ஆபாச காணொலி சர்ச்சையில் சிக்கியவர் கே. டி. ராகவன், இவரது காலில் அண்ணாமலை விழுந்துள்ளார் என்று பலரும் அண்ணாமலையை விமர்சித்து இப்புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இப்புகைப்படத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, நேற்று(மார்ச் 25)ஆம் தேதி, “இன்றைய தினம், வணக்கத்திற்குரிய சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்றேன்” என்று அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.
அதில் ஒரு புகைப்படம் தற்போது வைரலாகும் புகைப்படத்தை ஒத்து இருந்தது. இந்நிலையில், புகைப்படத்தில் இருக்கும் ஆதீனத்திற்கு பதிலாக கே.டி. ராகவன் புகைப்படத்தை வைத்து தவறாக எடிட் செய்து பரப்பி வருவதை நம்மால் அறிய முடிந்தது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக வைரலாகும் புகைப்படத்தை போட்டோ ஃபோரன்சிக் முறையில் ஆய்வு செய்ததில் எடிட் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக முன்னாள் பாஜக நிர்வாகி கே.டி. ராகவன் காலில் அண்ணாமலை விழுந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.