"துப்பாக்கியில் தோட்டாவை நிரப்பத் தெரியாமல் முழித்த எஸ்பி அண்ணாமலை" என்ற கேப்ஷனுடன் பிஹைண்ட்வுட்ஸ் ஏர் வெளியிட்ட செய்தியின் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில்(Archive link) வைரலாகி வருகிறது. அதில், காவல் அதிகாரி ஒருவர் பழங்கால பீரங்கியில் குண்டை செலுத்துவது போல் துப்பாக்கியின் முன்பகுதியில் தோட்டாவை செலுத்துகிறார்.
Fact-check:
முதலில், வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய நபர் சற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தோற்றத்தில் இருப்பதால் அண்ணாமலை என்று பரப்பப்பட்டதை நம்மால் கூற முடிகிறது. தொடர்ந்து, காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பிஹைண்ட்வுட்ஸின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி "உங்க ஊர்ல தோட்டா அங்கதான் போடுவார்களா..! சர்ப்ரைஸ் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர்" என்ற தலைப்பில் வைரலாகும் காணொலி ரீல்ஸாக வெளியிடப்பட்டிருந்தது. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை 2019ஆம் ஆண்டு மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேடுகையில், ஏசியாநெட் இது தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், "உத்தரப்பிரதேசத்தின் சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள கலிலாபாத் காவல்நிலையத்தில் ஐஜி பரத்வாஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சார்பு ஆய்வாளர் ஒருவரிடம் கலவரத்தை கட்டுப்படுத்த உதவும் ரப்பர் குண்டு சுடும் துப்பாக்கியை இயக்கக் கூறினார். அதனை இயக்கத் தெரியாது அதிகாரி, துப்பாக்கியின் பாரல் வழியாக குண்டை நுழைக்க முயற்சித்தார்" என்று கூறப்பட்டுள்ளது. இதே செய்தியை இந்தியா செய்தி இணையதளமும் வெளியிட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் பியூஷ் ராஜ், "காணொலியில் இருக்கும் சார்பு ஆய்வாளர் துப்பாக்கியை தவறாக கையாண்டதாக ஐஜி பாரத்வாஜ் தன்னிடம் தெரிவித்த நிலையில், சந்த் கபீர் நகர் காவல்துறை இதனை மறுத்து அறிக்கையொன்றை வெளியிட்டு இருப்பது விசித்திரமாக உள்ளது" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இக்காணொலியுடன் பதிவிட்டுள்ளார்.
பியூஷ் ராஜ் டுவிட்டர் பதிவு
Conclusion:
இறுதியாக, காணொலியில் உள்ள நபர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் என்றும் அதில் இருப்பவர் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இல்லை என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.