மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முக்கிய அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கட்சியினர் அவரைச் சென்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில், பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றார் என்று சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. காணொலியில் பலரும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசீ பெறுகின்றனர். அதில், கடைசியாக பிங்க் நிற சேலை அணிந்த பெண் ஆதரவாளர் ஒருவர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து வாழ்த்துகிறார். அப்பெண்ணின் தமிழிசை சௌந்தர்ராஜன் என்று கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ்மீட்டர் ஆய்வில் அப்பெண் அதிமுக ஆதரவாளர் என்பது தெரியவந்தது.
வைரலாகும் தகவலின் உண்மைத்தன்மையை கண்டறிய யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது V6 News Telugu ஊடகம் கடந்த 2016ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி, “தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து அதிமுக தொண்டர்களும், தமிழக அரசு அதிகாரிகளும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்” என்ற தலைப்புடன் வைரலாகும் அதே காணொலியை பதிவிட்டுள்ளது.
அதில், 3:29 முதல் 3:40 வரையிலான பகுதியில் வைரலாகும் காணொலியில் வரக்கூடிய அதே பெண்ணின் முகம் தெளிவாக தெரிகிறது. அவர், ஜெயலலிதாவின் காலில் விழுந்து வாழ்த்தி ஆசி பெறுகிறார். அவரது முகத்தையும் தமிழிசை சௌந்தர்ராஜன் முகத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் இருவரும் வெவ்வேறு நபர்கள் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து, இப்பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது Scroll, BBC Tamil உள்ளிட்ட ஊடகங்கள் அப்பெண்ணின் தெளிவான புகைப்படத்தை செய்தியில் வெளியிட்டுள்ளன. அப்புகைப்படத்தையும் தமிழிசை சௌந்தர்ராஜன் புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்த்ததில் இருவரும் வெவ்வேறு நபர்கள் என்பது உறுதியானது. மேலும், Times of India அப்பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) தலைவரும், தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதா, மாநில சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், 2016ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி அவரது ஆதரவாளரால் வரவேற்கப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், எங்கும் தமிழிசை சௌந்தரராஜன் பெயர் குறிப்பிடப்படவில்லை.
முடிவாக நம் தேடலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொலி தவறானது. உண்மையில் ஜெயலலிதாவிடம் ஆசி பெறுபவர் அதிமுக ஆதரவாளர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.