"கொடநாடு எஸ்டேட் ஒன்றும் சாதாரண இடமல்ல. அதை எதிர்க்கட்சி தலைவர் மறந்துவிடக் கூடாது. உங்கள் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் அம்மையார் ஜெயலலிதா அந்த கொடநாடு எஸ்டேட்டில் தங்கி இருக்கிறார். இதெல்லாம் எதிர்க்கட்சியினருக்கு தெரியாதா? அந்த சம்பவம் நடந்த நேரத்தில் நீங்கள் தான் முதலமைச்சர். என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்" என்று கடந்த ஜனவரி 9-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து கேட்பது போன்றும். அதற்கு, பதிலளிக்காமல் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இருந்து எழுந்து வெளியே செல்வது போன்றும் தந்தி டிவி லோகோவுடன் 26 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இந்த காணொலியின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய யூடியூப்பில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, "முதல்வர் ஸ்டாலின் பேசும் போது விறுவிறுவென வெளியேறிய ஈபிஎஸ் - பின்னாலேயே சென்ற ஓபிஎஸ்.." எனும் தலைப்பில் தந்தி டிவி வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், " பேரவையில் மிகவும் கண்ணியத்தோடு, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசத் தொடங்கிய உடன் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவினர் வெளியேறுகின்றனர். அப்போது ஆளுநர் உரைக்கு எதிரான தீர்மானம் குறித்து மட்டுமே ஸ்டாலின் பேசியிருப்பதும் அறிய முடிகிறது. இதனை செய்தியாக பிற நிறுவனங்களும் வெளியிட்டு உள்ளன.
தொடர்ந்து, வைரலாகும் காணொலியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடநாடு எஸ்டேட் தொடர்பாக பேசிய ஆடியோ குறித்து தேடியபோது, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியது என்பது தெரியவந்தது. ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள இந்தக் காணொலியின் ஒரு மணி நேரம் ஒன்பது நிமிடத்தில் முதலமைச்சர் பேசுவதை நம்மால் காண முடிகிறது.
Conclusion:
நம் தேடலில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடநாடு பற்றி பேசத் துவங்கியதும் எடப்பாடி பழனிசாமி வெளியே சென்றதாக பகிரப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.
2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது, முதலமைச்சர் ஸ்டாலின், கொடநாடு எஸ்டேட் குறித்து பேசிய ஆடியோவையும், 2023 ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறிய காட்சியையும் இணைத்து தவறாக பரப்பி வருகின்றனர்.