"இந்தியாவில் உலக்கோப்பை கால்பந்து நடக்கும் நாள் தொலைவில் இல்லை" என்று பிரதமர் மோடி கூறுவது போன்றும் அதற்கு, "நம்மை(இந்தியாவை) பிஃபா (FIFA) சஸ்பெண்ட் செய்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன" என்று ஒருவர் பதிலளிப்பது போன்ற மீம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
இத்தகவலின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிய முதலில், "இந்தியாவில் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி நடக்கும் நாள் தொலைவில் இல்லை" என்று பிரதமர் மோடி தெரிவித்தாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் கடந்த டிசம்பர் 18-ம் தேதி பிரதமர் மோடி ரூ.2450 கோடி மதிப்பிலான பல திட்டங்களைத் தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் போல் இந்தியாவிலும் நடத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்றார். இதனை பல்வேறு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.
மேலும், இந்தியாவை பிஃபா(FIFA) சஸ்பெண்ட் செய்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டனவா என்ற கூற்றின் உண்மைத்தன்மையைக் கண்டறிய கூகுளில் தேடினோம். அப்போது, இந்திய கால்பந்து கூட்டமைப்பில் மூன்றாம் தரப்பினர் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு(FIFA), அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு(AIFF) கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி இடைக்கால தடை விதித்துள்ளதாகவும், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழு அமைப்பு கலைக்கப்பட்டு அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் கீழ் இந்திய கால்பந்து சம்மேளனத்தின் அனைத்து தினசரி நிர்வாகக் கட்டுப்பாடுகளும் வருகிறதோ அன்று தடை நீங்கும்(மொழிபெயர்க்கப்பட்டது) என்று பிஃபா அறிவித்திருந்தது. பிஃபாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தடை உத்தரவு காரணமாக 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் உரிமையை இந்தியா இழக்கும் நிலை உருவானது. இந்நிலையில், இரண்டு வார இடைவெளிக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை பிஃபா நீக்கியது.
இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ள பிஃபா, "இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழுவின் அதிகாரங்களை ஏற்க அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் ஆணை நிறுத்தப்பட்டதையும், தினசரி விவகாரங்களில் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு(AIFF) நிர்வாகம் முழுக் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றது பிஃபா உறுதி செய்ததையடுத்து தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும்(மொழிபெயர்க்கப்பட்டது)" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Conclusion:
பிஃபா, அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு விதித்திருந்த தடையை சில நாட்களில் நீக்கிக் கொண்டது நமது தேடலின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, பகிரப்பட்டு வரும் மீமில் இந்தியாவை பிஃபா (FIFA) சஸ்பெண்ட் செய்திருப்பதாக கூறப்பட்டிருப்பது பொய் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.