இந்துக்களை இஸ்லாமியர்கள் துன்புறுத்துவது போன்றும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் கூறி பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வலதுசாரியினரால் பரப்பப்படுவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், “ஹிந்து சொந்தங்களுக்கான எச்சரிக்கைப் பதிவு. வெளிநாட்டில் வேலை என ஏமாற்றி ஹிந்து பெண்களை அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்த ஒரு ஹிந்து இளைஞர்” என்று கூறி சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், இளைஞர் ஒருவரும் பெண்ணும் இணைந்து வீட்டிற்குள் நுழைந்து அங்குள்ள மற்றொரு இளைஞரை தாக்கி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பெண்களை விடுவிப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இப்பெண்கள் இந்துக்கள் என்றும் இவர்கள் அரபு நாடுகளுக்கு விற்கப்படுவதாகவும் கூறி இக்காணொலியை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ்மீட்டர் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் வைரலாகும் காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.
காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதனை முதலில் ஆராய்ந்தோம். அப்போது, காணொலியின் 10 விநாடியில், “இக்காணொலி பொழுதுபோக்கிற்காக மட்டுமே” என்று பொறுப்பு துறந்துள்ளனர். இதனைக் கொண்டு வைரலாகும் காணொலி பொழுதுபோக்காக எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. தொடர்ந்து, காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம்.
அப்போது, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி வைரலாகும் காணொலியின் முழு நீள பதிவு Naveen Jangra என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அதிலும், இக்காணொலி பொழுதுபோக்கிற்காக மட்டுமே என்று பொறுப்பு துறந்துள்ளனர். மேலும், அந்த யூடியூப் சேனலை ஆய்வு செய்கையில். அதில், வைரலாகும் காணொலியில் இருப்பது போன்ற பல்வேறு பொழுதுபோக்கு காணொலிகள் வெளியிட்டுள்ளன.
நம் தேடலின் முடிவாக வெளிநாட்டில் வேலை என ஏமாற்றி இந்து பெண்கள் அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்து நிறுத்திய இந்து இளைஞர் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையில் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.