திமுக ஆட்சிக்கு எதிராக பேசினாரா கனிமொழி எம்பி?
மதுவிலக்குக் கொள்கையை வெறும் கண்துடைப்புக்காக முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார் என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசியதாக காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 20 Jan 2023 12:17 PM GMT"மதுக்கடைகளில் இரவு, 10 மணிக்கு பிறகும், 11 அல்லது 12 மணி வரை மது விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்த ஆட்சி மதுவிலக்கு கொள்கையில், எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறது என்பது தெரிகிறது. மதுவிலக்கு கொள்கை என்பதை, வெறும் கண்துடைப்புக்காக முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்களே தவிர, மதுக் கடைகளை மூடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறும் 20 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரியல் பிக்ஸ் யூடியூப் சேனல், "முதலமைச்சரை விளாசிய கனிமொழி அதிர்ந்த அறிவாலயம் சிக்கலில் DMK" என்ற தலைப்பில், இக்காணொலியில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் புகைப்படத்தை எடிட் செய்து மீம்ஸ் ஒன்றை இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக வெளியிட்டுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இக்காணொலியின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிவதற்காக முதலில் அதனை ஆய்வு செய்ததில், காணொலியின் ஆரம்பத்தில் "என் தமிழ்நாடு" என்று வருவதை நம்மால் காண முடிகிறது. இது குறித்து யூடியூப்பில் தேடியபோது நியூஸ் 7 தமிழ் "என் தமிழ்நாடு" என்ற தலைப்பில் செய்தித் தொகுப்பை வெளியிடுவது தெரிய வந்தது. மேலும், அதில் உள்ள நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் பயன்படுத்தும் மைக்கின் லோகோ பழைய வகையில் இருப்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து, "மதுவிலக்கு என்பது கண்துடைப்பு" என்று கனிமொழி கூறியது போன்ற செய்திகள் வெளியாகி உள்ளனவா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, "மதுவிலக்கு கொள்கை கண்துடைப்பு:- கனிமொழி" என்ற தலைப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், "தஞ்சாவூரில், திருமண விழாவில் பங்கேற்ற தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி அளித்த பேட்டி" என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா குறித்து பல்வேறு விஷயங்களை கனிமொழி பேசி இருப்பது பதிவாகி இருந்தது.
செய்தியில் இறுதியாக, "மதுக்கடைகளில் இரவு, 10 மணிக்கு பிறகும், 11 அல்லது 12 மணி வரை மது விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்த ஆட்சி மதுவிலக்கு கொள்கையில், எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறது என்பது தெரிகிறது. மதுவிலக்குக் கொள்கை என்பது, வெறும் கண்துடைப்புக்காக முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்களே தவிர, மதுக் கடைகளை மூடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் யூடியூப்பில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தற்போது வைரலாகக்கூடிய அதே காணொலி 1 நிமிடம் 14 விநாடிகள் ஓடக்கூடிய முழு நீள செய்தியாக நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாகி இருப்பது தெரியவந்தது.
Conclusion:
இறுதியாக, நமக்கு கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி, மதுவிலக்கு குறித்து பேசியதை தற்போது, திமுக ஆட்சியில் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் போது பேசியது போன்று தவறாக பொய் செய்தியை பரப்பி வருகின்றனர் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.