நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பெரியார் தொடர்பாக பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், “திமுக உருவான வரலாறு” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
அதில், “பெரியார் எங்கள் ஊருக்கு வந்தார். மணியம்மையைப் பார்த்தார் கூட்டிச் சென்றார். அவரை திருமணம் செய்துகொண்டார். அண்ணா, இது பொருந்தா திருமணம் என்று அறிக்கை வெளியிட்டார். கழகத்திலிருந்து வெளியேறினார் திமுக உருவானது. ஆக வேலூரில் உள்ள மணியம்மை இல்லாவிட்டால் அவரை பெரியார் திருமணம் செய்யாவிட்டால் திமுக வந்திருக்காது” என்கிறார். இதில் பெரியார் மணியம்மையைக் கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டார் என்று கொச்சையாக துரைமுருகன் பேசியது போன்று உள்ளது.
Fact-check:
நியூஸ்மீட்டர் ஆய்வில் துரைமுருகன் இவ்வாறு கொச்சையாக கூறவில்லை என்றும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்றும் தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய இதுதொடர்பாக யூடியூபில் சர்ச் செய்து பார்த்தோம். Oneindia Tamil கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி வைரலாகும் காணொலியை வெளியிட்டிருந்தது. அதில் பேசும் துரைமுருகன், “பெரியார் எங்கள் ஊருக்கு வந்தார். மணியம்மையைப் பார்த்தார் கூட்டிச் சென்றார். அவருக்கு தொண்டு செய்ய வைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, தனக்குப்பின் அந்த இயக்கத்தை வழிநடத்த ஒரு அறிவுள்ள பெருமாட்டி கிடைத்தார் என்று அவரை திருமணம் செய்து கொண்டார். அண்ணா, இது பொருந்தா திருமணம் என்று அறிக்கை வெளியிட்டார். கழகத்திலிருந்து வெளியேறினார், திமுக உருவானது. ஆக வேலூரில் உள்ள மணியம்மை இல்லாவிட்டால், அவரை பெரியார் திருமணம் செய்யாவிட்டால் திமுக வந்திருக்காது” என்கிறார்.
இதில், “அவருக்கு தொண்டு செய்ய வைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, தனக்குப்பின் அந்த இயக்கத்தை வழிநடத்த ஒரு அறிவுள்ள பெருமாட்டி கிடைத்தார்” என்று துரைமுருகன் கூறியதை நீக்கிவிட்டு நேரடியாக பெரியார் மணியம்மையை கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டார் என்று கொச்சையாக கூறியதாக எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அவர் இவ்வாறு பேசியதற்கு வருத்தம் தெரிவித்ததாகவும் அதே Oneindia Tamil செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவாக, நம் தேடலில் பெரியார் மணியம்மையை கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டார் என்று துரைமுருகன் கொச்சையாக கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டுள்ளது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.