தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுகின்றனரா? வைரல் காணொலிகளின் உண்மைப் பின்னணி?

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பல்வேறு காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  8 March 2023 8:19 PM IST
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவும் வதந்தி

வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை, அவர்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பலரும் தமிழ்நாட்டில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். இப்படியாக பல்வேறு காணொலிகளை சமூக வலைதளங்களில் இந்தி ஊடகங்களும், பீகாரைச் சேர்ந்த பாஜகவினரும் பரப்பி வருகின்றனர்.

Fact-check:

இந்நிலையில், பகிரப்படும் காணொலிகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக ஒவ்வொரு காணொலியையும் தனித்தனியே ஆய்வு செய்தோம். அதன்படி முதலில், தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் ஒருவரை சாலையில் வைத்து ஆயுதங்களால் தாக்கி வெட்டிக் கொலை செய்வது போன்று பரவும் காணொலியின்(Archive link) குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி Awake goans என்ற யூடியூப் சேனலில், ”MURDER OF GANGSTER ANWAR SHAIKH! 28 RAPES, MURDER, EXTORTION, & THREATE CASES” என்ற தலைப்பில் இதே காணொலி வெளியிடப்பட்டிருந்தது.

மேலும், 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடக மாநிலம் சாவனுர் பகுதியில் அன்வர் ஷேக் எனும் ரவுடியை சிலர் கொலை செய்த சம்பவம் குறித்து டெக்கான் ஹெரால்டு, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடுத்ததாக தமிழ்நாட்டில், பணிக்கு சென்று கொண்டிருந்த பீகாரைச் சேர்ந்த இருவரை கொலை செய்ய முயற்சித்து கத்தியால் வெட்டியதாக இரு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது(Archive link). இதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, கோவையில் 15 மணி நேரத்தில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக பிப்ரவரி 13ஆம் தேதி பிபிசி தமிழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இது கோவை நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையது. புகைப்படத்தில் இருப்பது கொலை செய்யப்பட்ட கோகுல் மற்றும் காயத்துடன் இருப்பது மனோஜ் என்று தெரியவந்தது. மேலும், இவர்கள் யாரும் வடமாநிலத்தவர்கள் அல்ல, கோவையைச் சேர்ந்தவர்களே.

வைரலாகும் புகைப்படம்

இறுதியாக, டூவீலரில் சென்ற நபரை சிலர் இரும்பு கம்பிகளால் தாக்கும் காணொலி(Archive link) ஒன்று வைரலாகி வருகிறது. இதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, இதே காணொலி உத்தரப்பிரதேசத்திலும் தவறாக பரவியது தெரியவந்தது. அதற்கு அம்மாநிலத்தின் புலந்த்சாகர் காவல்துறை இது பொய் செய்தி என்று மறுப்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.


புலந்த்சாகர் காவல்துறையின் அறிக்கை

தொடர்ந்து தேடுகையில், தி ஃப்ரீ ப்ரெஸ் ஜர்னல் பகிரப்படும் காணொலியில் உள்ள புகைப்படத்துடன் 2023ம் பிப்ரவரி 20ம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "பஞ்சாப் மாநிலம் சங்க்ரூர் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், ஒருவரை இருவர் கம்பியால் தாக்கி உள்ளனர். காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் பதிண்டாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்" கூறப்பட்டுள்ளது. இதே செய்தியை எபிபி செய்தி நிறுவனம் பஞ்சாபி மொழியில் செய்தியாக வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் தமிழ்நாட்டில் வாழும் வட மாநிலத்தவர் மத்தியில் பெரும் குழப்பமும் பயமும் ஏற்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், "வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள். சமூக ஊடகங்களில் இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது” என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும், தமிழ்நாடு காவல்துறை பொய் செய்தி பரப்பியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைதும் செய்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிக்கை

Conclusion:

நமது தேடலின் மூலம் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பகிரப்படும் காணொலிகளில் உண்மை இல்லை என்றும் அவை அனைத்தும் வதந்தி என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:Various videos claiming that migrant labours in Tamilnadu are being attacked by Tamilans went viral
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, Twitter, WhatsApp
Claim Fact Check:False
Next Story