மூதாட்டி ஒருவர் தற்போதைய திமுக அரசை கடுமையாக விமர்சிப்பது போன்ற 28 வினாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை வலதுசாரியினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், மூதாட்டியிடம் "ஆயிரம் ரூபாய் பெற்றீர்கள் அல்லவா" என்று ஒருவர் கேட்டதற்கு அம்மூதாட்டி, "ஏதோ அவர்களுடைய பணத்தையா நமக்கு கொடுத்தார்கள், அது எல்லாம் நம்முடைய பணம்(வரி) தான்" என்று பதிலளித்தார். மேலும், பொதுமக்கள் மீது அரசாங்கம் வரி மேல் வரி விதிக்கிறது என்பதையும் அம்மூதாட்டி சுட்டிக்காட்டுவது போன்று காணொலியில் இடம்பெற்றுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத் தன்மை குறித்து கண்டறிவதற்காக முதலில் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி தற்போது வைரலாகும் அதே காணொலி Samayanallur - Madurai - 625402(சமயநல்லூர் - மதுரை - 625402) என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ளது தெரிய வந்தது.
இதனைக் கொண்டு முகநூலில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, இதே காணொலி 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெவ்வேறு தேதிகளில் பல்வேறு முகநூல் பக்கங்களில் வெளியாகி இருப்பதை நம்மால் அறிய முடிகிறது. அதிலும் சில பக்கங்கள், "எடப்பாடி கொடுத்த 1000 ரூபாய் மக்களின் வரி பணம் தான் என்பதை கூறுகிறார் இந்த கிராமத்து பாட்டி" என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளன.
2020ஆம் ஆண்டு முகநூல் பதிவுகள்
முதற்கட்ட தேடலின் மூலம் இக்காணொலி 2020ஆம் ஆண்டே சமூக வலைதளங்களில் வைரலானதை நம்மால் அறிய முடிகிறது. மேலும், அதிமுக தலைமையிலான எடப்பாடி பழனிச்சாமி 2021ஆம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி தான் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் 2020ஆம் ஆண்டு முதல்வராக இருந்தது அதிமுக தலைமையிலான எடப்பாடி பழனிச்சாமி என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. மு.க. ஸ்டாலின் 2021ஆம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி தான் முதல்வராக பதவியேற்றார்.
Conclusion:
இறுதியாக நமக்கு கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ஆம் ஆண்டு மே மாதம் தான் பதவி ஏற்றது என்றும், தற்போது வைரலாகக்கூடிய காணொலி 2020ஆம் ஆண்டே சமூக வலைதளங்களில் வைரலானதால் அம்மூதாட்டி திமுக அரசை விமர்சிக்கவில்லை என்பதை ஆதாரப்பூர்வமாக கூற முடிகிறது.