ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் ஆளுநர் ஆவதற்கு முன்பு குடியிருந்த வீட்டைக் காலி செய்ய மாட்டேன் என்று பிரச்சினையில் ஈடுபட்டதால், காவல்துறையினர் ரவியையும் அவரது மனைவியையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் என்று, 1 நிமிடமும் 14 விநாடிகளும் ஓடக்கூடிய காணொலி ஒன்றை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பலரும் பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
முதலில், வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய நபர் சற்று ஆளுநர் ரவியின் தோற்றத்தில் இருப்பதால் ஆளுநர் ரவி என்று பரப்பப்பட்டதை நம்மால் கூற முடிகிறது. தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து கண்டறிவதற்காக காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி தற்போது வைரலாகும் காணொலியுடன் என்டிடிவி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், "உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் மூத்த காவல்துறை அதிகாரி அமிதாப் தாகூர். இவர் 2022-ம் ஆண்டிற்கான மாநில சட்டமன்றத் தேர்தலில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடப் போவதாக கூறி, அதிகார சேனா(Adhikar Sena) என்ற அரசியல் கட்சியின் பெயரையும் சமூக வலைதளங்களில் முன்மொழிந்தார். சிறிது நேரத்திலேயே, காவல் அதிகாரி ஒருவரை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் லக்னோவில் தனது வீட்டில் இருந்த போது அமிதாப் தாகூர் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்" என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாடைம்ஸ் செய்தி நிறுவனமும் இதனை செய்தியாக வெளியிட்டுள்ளது.
மேலும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், "மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதன் மூலம்தான் பாஜகவின் அரசியல் உயிரோடு இருக்கிறது. இப்போது, பாஜக அரசின் அழுத்தத்தால் காவல்துறைக்கு எதிராக காவல்துறையே செயல்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளுடனான இதுபோன்ற நடத்தையை மன்னிக்க முடியாது" என்று இதே காணொலியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Conclusion:
நமது தேடலின் முடிவாக, குடியிருந்த வீட்டைக் காலி செய்யாததால், ஆளுநர் ரவியையும் அவரது மனைவியையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் என்று பரவும் செய்தி பொய்யானது. உண்மையில், இது உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் மூத்த காவல்துறை அதிகாரி அமிதாப் தாகூரை கைது செய்த போது எடுக்கப்பட்ட காணொலி என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.