காவல்துறையினர் சிலர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது காவலர் ஒருவர் சைக்கிளில் செல்லும் சிறுவனை பிடித்து சோதனை செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாக பரவி விடுகிறது. இந்நிகழ்வு சமீபத்திய திமுக ஆட்சியில் நடைபெற்றதாகவும் ஹெல்மெட் அணியாமல் சைக்கிளில் பயணித்த சிறுவனிடம் காவல்துறையினர் அபராதம் விதித்ததாகவும் கூறி இக்காணொலியை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ்மீட்டர் ஆய்வில் இரு கைகளையும் விட்டுவிட்டு சைக்கிள் ஓட்டியதற்காக அச்சிறுவனை காவல்துறையினர் அழைத்து அறிவுரை வழங்கியது தெரிய வந்தது.
இது குறித்து உண்மை தன்மையை ஆராய வைரலாகும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி Telugu Muchattlu என்ற பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. இதனைக் கொண்டு இக்காணொலி பழையது என்று தெரிய வந்தது.
தொடர்ந்து, தேடுகையில் newsd என்ற ஊடகத்தில் வைரலாகும் காணொலி குறித்த செய்தி 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, 16 வயது சிறுவன் விக்ரம் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சைக்கிள் ஹேண்டில்பாரில் கைகளை வைக்காமல் ஓட்டி உள்ளான். உடனடியாக அவனை துணை காவல் ஆய்வாளரை சுப்ரமணி தடுத்து நிறுத்தியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே செய்தியை Times of India ஊடகமும் வெளியிட்டுள்ளது. அதில், இச்சம்பவம் தர்மபுரி மாவட்டம் எறையூர் பகுதியில் நடைபெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் கூறுகையில், “ஹேண்டில்பாரில் கைகளை வைக்காமல் சைக்கிள் ஓட்டிய சிறுவனை கண்டித்து அவனது பெற்றோரை அழைத்து வரும்படி உதவி காவல் ஆய்வாளர் கூறியதாக” தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை சிலர் காணொலியாக பதிவு செய்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி, சைக்கிள் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாததால் சிறுவனிடம் அபராதம் வசூலித்த காவல்துறையினர் என்று பகிர்ந்தது தெரியவந்தது. அதே சமயம் 2019ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
முடிவாக நம் தேடலில் ஹெல்மெட் அணியாமல் சைக்கிளில் சென்ற சிறுவனுக்கு தமிழ்நாடு காவல்துறையினர் அபராதம் விதித்ததாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் இச்சம்பவம் 2019ஆம் ஆண்டு நடைபெற்றது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், ஹேண்டில்பாரில் கைகளை வைக்காமல் சைக்கிள் ஓட்டிய சிறுவனை காவல்துறையினர் கண்டித்த காணொலியை தவறாக பரப்பி வருகின்றனர் என்றும் தெரியவந்தது.