நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சால்வை அணிவிக்க வந்த நபரிடம் “நிதி கொண்டாந்தியா” என்று கூறிவிட்டு சால்வையை அணிந்து கொள்ளாமல் “பத்து பைசாவிற்கு பிரயோஜனம் இல்லை...” என்று கூறுவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய இது குறித்து யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி NewsTamil 24x7 தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில், “சால்வை போட வந்த தம்பியை பங்கம் பண்ண அண்ணன்!” என்ற தலைப்பில் காணொலி ஒன்றை வெளியிட்டு இருந்தது.
அதில், வைரலாகும் காணொலியில் இருப்பது போன்று சால்வை அணிவிக்க வந்த நபரிடம் சால்வையை அணிந்துகொள்ளாமல் மறுத்துவிட்டு, “பத்து பைசாவிற்கு பிரயோஜனம் இல்ல அத வச்சுக்குட்டு… இத ஒரு பழக்கம்னு வச்சுக்கிட்டு…” என்று சீமான் கூறிச் செல்கிறார். இதில் சால்வை அணியும் பழக்கத்தை விமர்சிப்பது தெரிகிறது. மேலும், அதில் “நிதி கொண்டாந்தியா” என்ற வார்த்தை இடம்பெறவில்லை. இதன் மூலம் உண்மையான காணொலியில் அவ்வாறான வார்த்தை இடம் பெறவில்லை என்பது தெரிய வருகிறது.
இதனை நாம் தமிழர் கட்சியின் ஆதரவு யூடியூப் சேனலும் காணொலியாக வெளியிட்டுள்ளது. அதில், கட்சியில் சால்வை அணிவிக்கும் பழக்கம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர். மாறாக, சீமானை சந்திக்க வருபவர்கள் அவருக்கு புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினால் அதனை ஆதரிப்பார் என்றும் கூறுகின்றனர். அவர்கள் வெளியிட்டுள்ள காணொலியிலும் "நிதி கொண்டாந்தியா" என்ற வார்த்தை இடம்பெறவில்லை.
தொடர்ந்து, வைரலாகும் காணொலியில் உள்ள “நிதி கொண்டாந்தியா” என்று சீமான் கேட்பது உண்மையில் அவரது குரல் போன்று உள்ளதால், அவ்வாறாக உண்மையில் அவர் பேசினாரா என்று இணையதளத்தில் தேடினோம். அப்போது, ஃபேஸ்புக்கில் Ks Mani என்ற பயனர் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி காணொலி ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் சீமான் தனது கட்சி உறுப்பினரான சத்யா என்பவரிடம் சிரித்தபடி “நிதி கொண்டாந்தியா” என்று கேட்கவே அவரும் நிதியை வழங்குகிறார். அதனை பெற்றுக்கொள்ளும் சீமான் அருகில் இருக்கும் செந்தில் என்கிற நபரை அழைத்து தம்பி சத்யா அளித்த நிதி என்று வழங்குகிறார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, சால்வை அணிவிக்க வந்தவரிடம் “நிதி கொண்டாந்தியா” என்று சீமான் கேட்பது போன்று வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.