சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி, 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். இவரின் சாதனையைப் பாராட்டி தமிழக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு ரூ. 5 கோடி பரிசுத்தொகையையும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், “தெலுங்கர் குகேஷிற்கு ரூ. 5 கோடியும், தமிழனுக்கு வாழ்த்து மட்டும்” என்று தமிழக பாராலிம்பிக் தடகள வீரரான மாரியப்பன் தங்கவேலுவின் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் (Archive) தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இதன் மூலம் தமிழருக்கு வாழ்த்து மட்டும், அதுவே தெலுங்கருக்கு பரிசுத்தொகை என்று கூறி இத்தகவலைப் பகிர்ந்து வருகின்றனர்.
நியூஸ்மீட்டர் நடத்திய ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் தடகள வீரரான மாரியப்பன் தங்கவேலுவிற்கும் பரிசுத்தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது, 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்து தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு ரூ. 2 கோடி ஊக்கப் பரிசு அளிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி தினகரன் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 1 கோடி ஊக்கப்பரிசுத் தொகையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் தேடலின் முடிவாக தமிழக தடகள வீரரான மாரியப்பன் தங்கவேலுவிற்கு தமிழ்நாடு அரசு சார்பாக பல்வேறு முறை ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.