"ICELAND - நாட்டில் ஆண்கள் பற்றாக்குறை காரணமாக ஐஸ்லாந்து பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு மாதம் 3.5 லட்சம் பணம் வழங்க அந்த நாட்டு அரசு முடிவெடுதுள்ளது" என்ற தகவலுடன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய கூகுளில் தேடியபோது, ஐஸ்லாந்து நாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் குடியேறிகளுக்கு மாதம் 5000 டாலர்கள் ஐஸ்லாந்து அரசாங்கம் வழங்குகிறது என்ற தகவல் கடந்த 2019-ம் ஆண்டும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து, ஐஸ்லாந்து நாட்டில் ஆண்கள் பற்றாக்குறை காரணமாக அந்நாட்டு பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு மாதம் ரூ. 3.5 லட்சம் வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதா என்பது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச்(கூகுள் சர்ச் முடிவுகள்) செய்து பார்த்தோம். ஆனால், அப்படியாக எந்தவொரு அறிவிப்பையும் அந்நாட்டு அரசு வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அந்நாட்டு ஆங்கில ஊடகமான Icelandmonitor வெளியிட்டுள்ள செய்தியில், திருமணம் செய்தால் ஐஸ்லாந்து பணம் வழங்கும் என்று வரக்கூடிய அனைத்து செய்திகளும் ஒரு புரளி என்றும், இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமோ அல்லது அதன் வெளிநாட்டு பிரதிநிதிகளிடமோ விசாரிக்கத் தேவையில்லை என்று ஐஸ்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், தாய்லாந்தில் உள்ள ஐஸ்லாந்தின் கெளரவத் துணைத் தூதரகத்தின் தூதரக அதிகாரி சம்னார்ன் விரவனின்(Chamnarn Viravan), இது பொய் என்று மறுத்துள்ளார். தொடர்ந்து, ஐஸ்லாந்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திருமணம் தொடர்பான பகுதியை ஆய்வு செய்த போது அந்நாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் குடியேறிவர்களுக்கு பணம் வழங்குவதாக எங்கும் குறிப்பிடவில்லை.
Conclusion:
நமது தேடலின் மூலம், ஐஸ்லாந்து நாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் குடியேறிகளுக்கு மாதம் ரூ 3.5 லட்சம் ஐஸ்லாந்து வழங்குகிறது என்று பரவும் செய்தி வதந்தி என்றும் இது போன்று ஏற்கனவே பலமுறை பரவி உள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.