பல முறை எச்சரித்தும் மசூதியில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதால், உத்தரப்பிரதேச முதல்வரின் உத்தரவின் பேரில் மசூதி இடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு காணொலி வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஜனவரி 15-ம் தேதி "இந்திய முஸ்லிம்கள்: 5 நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மசூதியின் இடிப்பு கோபத்தை எழுப்புகிறது" என்ற தலைப்பில் பிபிசி அரபு மொழியில் இக்காணொலியுடன் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.
கிடைத்த தகவலைக்கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, தி சியாசட் டெய்லி, " உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜின் ஹந்தியா பகுதியில் உள்ளது ஷாஹி மசூதி. 16-ம் நூற்றாண்டில் சேர் சா சூரியின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது இது, ஜிடி சாலையின் விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்டதாக பிரயாக்ராஜ் பொதுப்பணித்துறையினர் விளக்கமளித்துள்ளனர்" என்று செய்தி வெளியிட்டுள்ளது. இதே செய்தியை மிடில் ஈஸ்ட் ஐ என்ற செய்தி நிறுவனமும் யூடியூப்பில் ஷார்ட்ஸாக வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தேடுகையில், ரோஹித் சிங் என்பவருடைய டுவிட்டர் பதிவிற்கு, "பிரயாக்ராஜ்-ஹண்டியா பிரதான சாலையை அகலப்படுத்தும் பணி பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சைதாபாத்தில் உள்ள தனக்ஷேத்ரா ஹண்டியாவின் சாலை விரிவாக்கப் பாதையில் ஷாஹி மசூதி அமைந்துள்ளது. மசூதியின் கமிட்டி உறுப்பினர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதுடன் கடந்த 9-ம் தேதி அன்று பள்ளிவாசல் அகற்றப்பட்டது. காவல்துறையினர் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்" என்று பிரயாக்ராஜ் காவல்துறை ஆணையரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் பதிலளித்துள்ளது.
பிரயாக்ராஜ் காவல்துறை ஆணையரின் டுவிட்டர் பதிவு
Conclusion:
நமது தேடலின் மூலம் கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், மசூதியில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதால், உபி முதல்வரின் உத்தரவின் பேரில் மசூதி இடிக்கப்பட்டதாக பரவும் தகவல் பொய்யானது என்று கூற முடிகிறது. மேலும், சாலை விரிவாக்கத்திற்காகவே மசூதி இடிக்கப்பட்டது என்று நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.