"கடந்த மாதம் ரமலான் தராவீஹ்(ரமலான் மாதத்தில் தொழுகப்படும் சிறப்பு தொழுகை) தொழுகையில் பூனை ஒன்று இமாம்(தொழுகையை முன்னின்று நடத்துபவர்) அவரது தோளின் மேல் ஏறி அவருக்கு முத்தமிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது நினைவிருக்கலாம். பார்வையற்ற அந்த இமாமான *ஷேய்க் அப்துல்லாஹ் கமால்* அவர்கள் நேற்று(வியாழன்) இறைவனிடம் மீண்டு விட்டார்கள்." என்று வைரலான இமாமின் புகைப்படத்துடன் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Fact-check:
இத்தகவலின் உண்மைத்தன்மையைக் கண்டறிய இது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, டுவிட்டரில் ரியாஸ் அஹமத் என்ற பயனர் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு, "இரண்டும் வேறுபட்டவை, இடதுபுறம் உள்ள படம் அல்ஜீரியாவைச் சேர்ந்த இமாம் ஷேக் வாலித் மஹ்சாஸ், அவர் உயிருடன் உள்ளார். மற்றொருவர் எகிப்தைச் சேர்ந்த மறைந்த இமாம் ஷேக் அப்துல்லா கமால்" என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் உயிரிழந்தது எகிப்தைச் சேர்ந்த இமாம் ஷேக் அப்துல்லா கமால் என்பது தெரியவந்தது.
ரியாஸ் அஹமதின் டுவிட்டர் பதிவு
தொடர்ந்து, இவரது இறப்பு குறித்த தேடுகையில், "புகழ்பெற்ற புனித குர்ஆன் ஓதுபவரான ஷேக் அப்துல்லா கமால், தனது 37வது வயதில் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள அல்-தவ்ஹீத் மசூதியில் தொழுகையின் போது உயிரிழந்தார்" என்று டயலாக் பாகிஸ்தான் என்ற செய்தி நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக, ஷேக் அப்துல்லா கமால் கடந்த ஏப்ரல் 27ம் தேதி உயிரிழந்தார் என்று அல்-தவ்ஹீத் மசூதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளது.
Conclusion:
இறுதியாக, உயிரிழந்த எகிப்தைச் சேர்ந்த பிரபல குர்ஆன் ஓதுபவரான ஷேக் அப்துல்லா கமால் என்பவரது புகைப்படத்திற்கு பதிலாக சமீபத்தில் தொழுகையின் போது பூனை ஒன்று இமாமின் தோளின் மேல் ஏறி அவருக்கு முத்தமிட்ட வீடியோ மூலம் வைரலான இமாமின் புகைப்படத்தை தவறாக பரப்பி வருவதை அறிய முடிகிறது.