"பாஜக நிர்வாகி அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவில் ஆஜர். அமர்பிரசாத் ரெட்டி, பால் கனகராஜ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் ஹரிஷிடம் ரூ.84 கோடியை பெற்றதாக ஒப்புதல்" என்று 12.04.2023 தேதியிட்ட தினமலரின் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில்(Archive link) வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய தினமலரின் சமூக வலைதளப் பக்கங்களில் ஏப்ரல் 12ம் தேதிக்கான பதிவுகளில் தேடியபோது, வைரலாவது போன்ற செய்தி ஏதும் வெளியாகவில்லை என்பது உறுதியானது. இது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, "ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை - பாஜக நிர்வாகி அலெக்ஸ்" என்ற தலைப்பில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "அலெக்ஸ் நேற்று(ஏப்ரல் 12) மாலை 4 மணியளவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு 1 மணி நேரமாக விளக்கமளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரமுகர் அலெக்ஸ், பாஜக நிர்வாகி ஹரிஷ் ஆருத்ரா வழக்கு தொடர்பாக தன்னிடம் வந்ததாகவும், அவருக்கு வழக்கறிஞர் என்ற முறையில் சில ஆலோசனைகள் அளித்ததாகவும், அவரை இதுவரை ஒரு முறை தான் சந்தித்தாகவும், 5 முறை செல்போனில் பேசியதாகவும் மற்றப்படி தனக்கும் அவருக்கும் எவ்வித தொடர்புமில்லை என போலீசாரிடம் தெரிவித்ததாக கூறினார்." என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், "ஹரிஷ் உடன் தனக்கு தொடர்பு இல்லாத நிலையில் தம்மை சம்மந்தப்படுத்திய காவல்துறை அறிக்கையே தவறு என அவர்களிடம் எடுத்துரைத்திருப்பதாக அலெக்ஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜவில் பணம் கொடுத்து பதவி வாங்கும் நிலை இல்லை என்றும் தன்னை யாரோ சிக்கவைத்திருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது. இதனை இந்து தமிழ் திசையும் செய்தியாக வெளியிட்டுள்ளது.
Conclusion:
இறுதியாக நமக்கு கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் வைரலாகும் நியூஸ் கார்டை தினமலர் வெளியிடவில்லை என்பதும் அமர்பிரசாத் ரெட்டி, பால் கனகராஜ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் ஹரிஷிடம் ரூ.84 கோடி பெற்றனர் என்று காவல்துறையினரிடம் ஆஜரான அலெக்ஸ் கூறியதாக பகிரப்படும் தகவல் பொய் என்றும் ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.