ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், “இந்தியும் தமிழும்தான் எங்கள் உயிர்…” என்ற கேப்ஷனுடன் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் பேசும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
அதில் பேசும் அவர், “திமுகவின் இரு மொழிக் கொள்கை என்றைக்கும் இருக்கும். இந்தியும், தமிழும் தான் எங்களுடைய உயிர்” என்கிறார். இதனைக் கொண்டு திமுக வேட்பாளர் இந்தியும் தமிழும் தான் உயிர் என்று கூறியதாக பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்காணொலி எடிட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்தது.
வைரலாகும் தகவலின் உண்மையை கண்டறிய இதுதொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பாலிமர் செய்தி ஊடகம் நேற்று (ஜனவரி 31) இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில் பேசும் வி.சி. சந்திரகுமார், “முதலில் ஒருவிஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். திமுகவின் கொள்கை இருமொழிக் கொள்கை ஒன்று ஆங்கிலம் மற்றொன்று தமிழ். தமிழும் ஆங்கிலமும் தான் திமுகவில் இருமொழிக் கொள்கை. எந்த காலகட்டத்திலும் திமுக இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறது. அதில், தெளிவாக இருக்கின்றோம்” என்று கூறுகிறார்.
தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தி மொழியில் திமுக நோட்டீஸ் விநியோகம் செய்ததாக வெளியான செய்திக்கு பதிலளித்த அவர், “இந்த நோட்டீஸ் விஷயத்தைப் பொறுத்தவரை திமுக இந்தி திணிப்பை அன்றும் இன்றும் என்றும் எதிர்க்கும். ஈரோட்டில் ஜவுளி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு கோத்தாரி குடும்பத்தை தெரியாமல் இருக்காது. இக்குடும்பத்தைச் சேர்ந்த லக்கி கோத்தாரி என்ற இளைஞர் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக திமுகவில் உறுப்பினராக உள்ளார்.
அவர் வட இந்தியாவைச் சேர்ந்த வியாபாரிகளிடம் எங்களை அழைத்துச் சென்று வாக்கு கேட்கச் சொன்னார். அதன் பிறகு அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு நோட்டீஸ் தமிழில் இருப்பது புரியவில்லை என்று கூறவே அவர் தானாகவே முன்வந்து நாங்கள் தமிழில் கொடுத்த நோட்டீஸை இந்தியில் அச்சடித்து வட இந்திய மக்களிடத்திலேயே அவர் தனிப்பட்ட முறையில் கொடுத்துள்ளார். இதுதான் நடந்ததே தவிர வேறு எதுவும் சர்ச்சைக்குரிய விஷயம் இல்லை. அதிமுக மட்டுமல்ல அனைத்து கட்சிகளும் தேர்தல் நேரத்தில் பரப்புரையின் போது வட இந்தியர்கள் வசிக்கக்கூடிய இந்திரா நகர் பகுதியில் இந்தியில் நோட்டீஸ் அடித்து அவர்களிடம் வாக்கு சேகரிப்பது வாடிக்கை” என்று கூறினார்.
தொடர்ச்சியாக பேசிய அவர், “திமுகவின் இரு மொழிக் கொள்கை என்றும் இருக்கும். இந்தியும், தமிழும் தான் எங்களுடைய உயிர்” என்று கூறிவிட்டு, “மன்னிக்கவும் தவறாக கூறிவிட்டேன் தமிழும் ஆங்கிலமும் தான் எங்களுடைய உயிர்” என்று தெளிவுபடுத்துகிறார்.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் இந்தியும் தமிழும் தான் எங்களுடைய உயிர் என்று திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்றும் உண்மையில் அவர் அவ்வாறாக கூறிவிட்டு தன் தவறை திருத்தி மீண்டும் ஆங்கிலமும் தமிழும் தான் எங்களுடைய உயிர் என்று கூறுகிறார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.