“அண்ணன் வாய் முகூர்த்தம் பலிக்க வாழ்த்துக்கள்…” என்ற கேப்ஷனுடன் திமுக நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிக்கும் காணொலி ஒன்றும் அதோடு தங்க தமிழ்ச்செல்வனின் செய்தியாளர் சந்திப்பின் காணொலி ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தங்கத்தமிழ்செல்வன் தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில், வேட்பாளரை ஆதரித்து நேற்று (மார்ச் 24)ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், “உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி உள்ளார். இந்த தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்” என்று தங்க தமிழ்ச்செல்வன் பேசியது போன்று அக்காணொலியில் பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய இது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2020ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி Jaya Plus(Archive) ஊடகம் எக்ஸ் தளத்தில் வைரலாகும் செய்தியாளர்கள் சந்திப்பு காணொலியுடன் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “நிச்சயமாக எடப்பாடியின் ஊழல் அரசை மக்களுக்கு வெளிப்படையாக எடுத்துக்காட்டுவதற்கு தான் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். அந்தப் பயணம் வெற்றிகரமாக முடியும்” என்று கூறிவிட்டு “இந்தத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்” என்றும் உளறினார். இறுதியாக அருகில் இருப்பவர்கள் “அதிமுக” என்று கூறவே தான் உளறியதை உணர்ந்து கொண்டு “அண்ணா திமுக(அதிமுக) படுதோல்வியை சந்திக்கும்” என்று மாற்றி கூறுகிறார்.
இதில், உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி உள்ளார் என்று கூறியதற்கு பின் “அந்தப் பயணம் வெற்றிகரமாக முடியும்” என்று கூறியதை நீக்கிவிட்டு, “இந்த தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்” என்று தங்க தமிழ்ச்செல்வன் உளறும் பகுதியை வைத்து எடிட் செய்து தவறாக பரப்பி வருவதை நம்மால் காண முடிகிறது. மேலும், இக்காணொலி 2020ஆம் ஆண்டு பதிவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இது தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021ன் போது எடுக்கப்பட்ட பழைய காணொலி என்றும் கூற முடிகிறது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி உள்ள நிலையில், இந்த தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் என்று திமுக நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாக வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.