"இவர்தான் இமாலயா கம்பெனி உரிமையாளர்..இந்துக்கள் நடத்தும் நிறுவனங்கள் தயாரிக்கும் எந்த பொருளையும் வாங்காதீர்கள் என்று சொல்கிறார். இந்துக்களுக்கு புரிந்தால் நல்லது.." எனக்கூறி காணொலி ஒன்றை வலதுசாரியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் இஸ்லாமியர் என்பதால் இவ்வாறாக பரப்பி வருகின்றனர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, BesuraTaansane என்ற டுவிட்டர் பயனர், வைரலாகும் காணொலியை ரீபோஸ்ட் செய்து, "இவர் பனு பிரதாப் சிங், ஒரு இந்து வழக்கறிஞர்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், காணொலியில் Times Express என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் யூடியூபில் வழக்கறிஞர் பனு பிரதாப் சிங் குறித்து தேடுகையில், ஜனவரி 25ஆம் தேதி 2020ஆம் ஆண்டு Times Express என்ற யூடியூப் சேனலில், "இந்துஸ்தானி என்று சொல்வதை நிறுத்துங்கள் - பனு பிரதாப் சிங்! CAA தொடர்பாக முஸ்லிம்களிடையே குழப்பம்" என்ற தலைப்பில் வைரலாகும் காணொலியின் முழு நீளக் காணொலி வெளியிடப்பட்டிருந்தது.
மேலும், அதன் டிஷ்க்ரிப்ஷன் பகுதியில், "CAA மீதான உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பிறகு, டெல்லி முஸ்தபாபாத்தில் தர்ணாவில் அமர்ந்திருந்த மக்களிடம் உரையாற்றிய நாட்டின் பிரபல வழக்கறிஞர் பனு பிரதாப் சிங் என்ன சொன்னார் என்பதை இப்போது முழு வீடியோவைப் பாருங்கள்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு இவர் ஒரு வழக்கறிஞர் என்று உறுதியாக கூறமுடிகிறது. மேலும், முகமது மணல் என்பவர் தான் இமாலயா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் என்றும் அவர் 1986ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் அந்நிறுவனத்தின் தலைவராக மீரஜ் மணல் இருப்பதாக இமாலயா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மணல்
Conclusion:
நமது தேடலில் முடிவாக இமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் இந்துக்கள் நடத்தும் நிறுவனங்கள் தயாரிக்கும் எந்த பொருளையும் வாங்காதீர்கள் என்று கூறியதாக வைரலாகும் காணொலியில் இருப்பது வழக்கறிஞர் பனு பிரதாப் சிங் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.