"நாயுடன் உறவு கொண்ட நாதக பிரமுகர் தர்ம அடி கொடுத்த மக்கள்" என்ற தகவலுடன் ஒரு நபரை பொதுமக்கள் அடித்து இழுத்துச்செல்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய முதலில் புகைப்படத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இப்புகைப்படத்தில் உள்ள "நாதக" என்ற வார்த்தைக்கு பதிலாக "திமுக, அதிமுக" போன்ற கட்சிகளின் பெயரை எடிட் செய்து ஏற்கனவே தவறாக பரப்பப்பட்டு வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, இது தொடர்பாக யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி பாலிமர் நியூஸ் தனது யூடியூப் சேனலில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், தற்போது வைரலாகும் அதே புகைப்படம் தம்ப்நெயில் புகைப்படமாக இடம்பெற்றுள்ளது. மேலும், அதில், "பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
யூடியூப் காணொலியின் தம்ப்நெயில்
அக்காணொலியில், "திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மலை அடிவார சாலையில் கம்மங்கூழ் விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் நபர் ஒருவர், நகை பறிக்க முயன்றுள்ளார். அப்பெண் கூச்சலிடவே, அந்நபர் அருகில் இருந்த குளத்தில் குதித்து தப்ப முயற்சித்துள்ளார். பொதுமக்கள் சூழ்ந்ததால் குளத்தில் இருந்து வெளியேறிய அந்நபரை தர்மஅடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்." என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அதே தேதியில் சமயம் தமிழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் பாண்டி என்பதும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் ரேணுகாதேவி என்றும் பாண்டி இதுபோன்ற சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Conclusion:
நமது தேடலின் முடிவாக, பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து அடித்த புகைப்படத்தை நாம் தமிழர் கட்சி பிரமுகர் நாயுடன் உறவு கொண்டதாக கூறி தவறாக பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.