"மக்களின் வெப்பசூட்டை போக்க பலரும் நீர் மோர் பந்தல்கலை திறப்பார்கள். ஆனால், நாம் அப்படி ஏனோதானோ என இருக்க முடியாது. மக்களின் சூட்டை போக்கும் விதத்திலும் அதேசமயம் உடல் பினிகளை நீக்கும் விதத்திலும் மோருடன் கோமிய பானத்தையும், கூடவே ஸ்ராபெரி, மாங்கோ, நன்னாரி வாசனைகளிலும் வழங்கி மக்கள் மனங்கவர வேண்டும்" என்று கடந்த மார்ச் 27ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில்(Archive link) அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய முதலில், இது தொடர்பாக செய்திகள் ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடுகையில்(கூகுள் சர்ச் முடிவுகள்), அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. மேலும், ஃபோட்டோ ஃபோரன்சிக் முறையில் ஆய்வு செய்தபோது, வைரலாகும் அறிக்கையில் உள்ள எழுத்துக்கள் எடிட் செய்யப்பட்டது என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக மற்றும் அதன் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் மார்ச் 27ஆம் தேதிக்கான பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது, "கோடை காலம் துவங்கி உள்ள இன்றைய சூழலில் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கும் பணியில் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள், அனைவரும் முழு வீச்சில் ஈடுபட வேண்டும். அந்த தண்ணீர் மோர் பந்தல்களை தினசரி பராமரிக்க வேண்டும். மக்கள் தேடி வந்து பயன்படுத்துமாறு அங்கு நல்ல சூழலை உருவாக்கி தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என்றே விரிவான அறிக்கையை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், கோமியம் என்ற வார்த்தை கூட பயன்படுத்தப்படவில்லை.
Conclusion:
இறுதியாக நமது தேடலின் மூலம் கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் பகிரப்பட்டு வரும் தமிழ்நாடு பாஜகவின் அறிக்கை எடிட் செய்யப்பட்டது என்று நிரூபிக்க முடிகிறது.