Fact Check: இந்துப்பை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் சிறுநீரகம் இயல்பு நிலைக்கு திரும்புமா?
15 அல்லது அதிகபட்சம் 30 நாட்களுக்கு இந்துப்பை எடுத்துக்கொண்டால் இரண்டே வாரத்தில் சிறுநீரகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது
By Ahamed Ali
Claim:தொடர்ச்சியாக இந்துப்பை எடுத்துக் கொண்டால் இரண்டே வாரங்களில் சிறுநீரகம் இயல்பு நிலைக்குத் திரும்பும்
Fact:இத்தகவல் தவறானது. இந்துப்பு சிறுநீரகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை
இரத்தத்தை வடிகட்டுதல், கழிவுப் பொருட்களை சிறுநீராக வெளியேற்றுதல், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், தாதுப் பொருள்களின் அளவைச் சரிசெய்தல் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியில் பங்கு வகித்தல் ஆகியவை சிறுநீரகத்தின் முக்கியப் பணிகளாகும். இதைத் தவிர பல்வேறு பணிகளையும் அது மேற்கொள்கிறது.
இதில், ஏதேனும் ஒரு பணியை சிறுநீரகம் சரியாக மேற்கொள்ளாத பட்சத்தில் அதையே சிறுநீரக செயலிழப்பு என்கிறோம். சிறுநீரகம் மோசமாக செயலிழந்து போனால் அதற்கு டயாலிசிஸ் செய்வதும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதுமே கடைசி சிகிச்சையாக உள்ளது. மேலும், சிறுநீரகம் செயலிழந்தவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக இவர்கள் உப்பு சேர்த்து சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.
வைரலாகும் பதிவு
இந்நிலையில், செயலிழந்த சிறுநீரகத்தை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து ‘இந்துப்பு’ என்றும் இதனை மட்டும் பயன்படுத்தி வீட்டில் உணவு சமைத்து சாப்பிடுங்கள், 15 அல்லது அதிகபட்சம் 30 நாட்களில் சிறுநீரகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று சமூக வலைதளங்களில் (Archive) நீண்ட தகவல் வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் சிறுநீரகம் செயலிழந்தவர்கள் இந்துப்பை பயன்படுத்தக் கூடாது என்று தெரியவந்தது.
வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை கண்டறிய சிறுநீரகம் செயலிழந்தவர்கள் இந்துப்பு சாப்பிடலாமா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Nutri Konnect என்ற இணையதளத்தில் எந்த வகை உப்பு சிறந்தது என்று தலைப்பில் சிறுநீரக ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரச்சனா ஜசானி வழிகாட்டுதலைக் காண்பித்துள்ளார். அதன்படி, வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் உப்பைவிட இந்துப்பில் 0.28% அதிகமாக பொட்டாசியம் உள்ளது. எனவே, சிறுநீரக நோயாளிகளுக்கு இது பாதுகாப்பானது அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Nutri Konnect இணையத்தளம்
மேலும், விகடன் ‘இந்துப்பு' நல்லதா... கெட்டதா..? என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்துப்புக்கென பல்வேறு மருத்துவக் குணங்கள் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அளவுக்கு மீறி பயன்படுத்தினால் ஆபத்தை ஏற்படுத்தும். இந்துப்பு பயன்படுத்துவதால், செயலிழந்த சிறுநீரகம் பழைய நிலைக்குத் திரும்பி புத்துயிர் பெறும் என்று சொல்வதெல்லாம் பொய்.
சிறுநீரகத்தில் பிரச்னையை வைத்துக்கொண்டு இந்துப்பை மட்டுமே கொண்டு சரி செய்துவிடலாம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு. சமூக வலைதளங்களில் இதுபோன்று பரப்பப்படும் அனைத்துத் தகவல்களையும் உண்மையென்று நம்பிவிடக்கூடாது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அதன் செயல்படும் திறன், கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் ஆகியவற்றைப் பொறுத்தே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்துப்பு சிறுநீரகத்தை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று பரவும் தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது.
விகடன் வெளியிட்டுள்ள செய்தி
இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் சிறுநீரகத்துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த மருத்துவர் கூறுகையில், “சிறுநீரகத்தில் பிரச்சனை உடைய நோயாளிகளுக்கு இந்துப்பை கொடுக்கவே கூடாது. அது இருதயத்திற்கு தான் நல்லது, சிறுநீரகத்திற்கு அல்ல. இந்த உப்பில் அதிகப்படியான பொட்டாசியம் இருப்பதால் இதனை எடுத்துக் கொள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு அறிவுறுத்த மாட்டோம்” என்கிறார் எச்சரிக்கையுடன்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக செயலிழந்த சிறுநீரகத்தை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் இந்துப்பு என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் அடிப்படை ஆதாரம் அற்றது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.