Fact Check: ஆர்.எஸ்.எஸ் குறித்து கருத்து தெரிவித்தாரா டொனால்ட் ட்ரம்ப்? உண்மை என்ன
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆர்.எஸ்.எஸ் குறித்து பேசியதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 11 March 2025 12:13 AM IST
Claim: ஆர்.எஸ்.எஸ் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
Fact: இத்தகவல் தவறானது. வைரலாகும் காணொளி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவது, அமெரிக்காவில் இனி ஆண், பெண் என்ற இரண்டு பாலினம் தான். மூன்றாம் பாலினம் எதுவும் கிடையாது என்பது போன்ற பல்வேறு உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருகிறார்.
இச்சூழலில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் அருணாச்சல பிரதேச மத சுதந்திரச் சட்டம் (APFRA), 1978க்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. இச்சட்டம் பழங்குடி சமூகங்களின் பாரம்பரிய மத நடைமுறைகளை வெளி நபர்களிடம் இருந்து பாதுகாக்க அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் சட்டம் ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை. மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவர்கள் APFRAவை எதிர்க்கும் அதே வேளையில், பழங்குடி நம்பிக்கை விசுவாசிகள் அதை ஆதரித்து சமீபத்தில் தெருக்களில் இறங்கி, அதை முன்கூட்டியே செயல்படுத்தக் கோரி போராடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், “மோடியின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பற்றி! அமெரிக்க உளவு அமைப்பின் உண்மையான தகவல் மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில்… அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலக மக்களுக்கு மிகத்தெளிவாக கூறியுள்ள தகவலை நம் இந்தியர்கள் ஒவ்வொருவரும் கேளுங்கள்!” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
அதில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த Donyi Polo சமூகத்தில் உள்ள குறிப்பிட்ட நபர்கள் அரசியல் நோக்கத்திற்காக ஆர்.எஸ்.எஸிற்கு தங்கள் அடையாளத்தையும் நம்பிக்கையையும் விற்கிறார்கள், APFRA சட்டத்தைப் பயன்படுத்தி கிறிஸ்தவ Tani மக்களிடையே மோதலைத் தூண்டுகிறார்கள் என்று ட்ரம்ப் கூறுகின்றார்.
Tani மக்களைப் பிரிப்பதில் ஆர்.எஸ்.எஸிற்கு உதவுவதற்காக பணம் வாங்கியவர்களை அடையாளம் காணுமாறு அவர் சமூகத்தை வலியுறுத்துகிறார். கூடுதலாக, ட்ரம்ப் ஆர்.எஸ்.எஸிலிருந்து நிதி பெறாத Donyi Polo சமூகத்தைச் சேர்ந்த உண்மையாளர்களை ஒன்றிணைத்து மாநிலத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸிடம் பணம் வாங்கியவர்களை அகற்ற ட்ரம்ப் அழைப்பு விடுப்பதும் தெரிகிறது.
வைரலாகும் பதிவு
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவருகிறது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய வைரலாகும் காணொலியில் ட்ரம்ப் பேசியவற்றை கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறான எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்று தெரியவந்தது. இவ்வாறான ஒரு கருத்தை ட்ரம்ப் தெரிவித்திருந்தாள் அது சர்வதேச செய்தியாக வெளியிடப்பட்டிருக்கும்.
Deep Fake O Meter ஆய்வு முடிவு
மேலும், காணொலியில் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதற்கான சிதைவுகள் இருந்தன. இதனால் அக்காணொலியை Deep Fake O Meter என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்ததில், வைரலாகும் காணொலி 85.8% AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவைத் தந்தது. மேலும், Hive Moderation இணையதளத்தில் வைரலான காணொலியை பதிவேற்றி பகுப்பாய்வு செய்ததில், அக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று முடிவையே தந்தது.
Hive Moderation ஆய்வு முடிவு
Conclusion:
முடிவாக நம் தேடலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆர்.எஸ்.எஸ் குறித்து பேசியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.