நடைபெற்று முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் தொடர்பாக பல்வேறு பொய் செய்திகளும், புரளிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு “செருப்படி கொடுத்த ட்ரம்ப்” என்ற பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து கடந்த நவம்பர் 6ஆம் தேதி எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ட்ரம்ப், “இந்தியாவின் சோரோஸ் ஏஜென்ட் ராகுல் காந்திக்கு நன்றி. ஆனால், தெளிவாக இருக்கட்டும்- தனது சொந்த நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ஒருவர், ஜார்ஜ் சோரோஸ் போன்ற இந்திய எதிர்பாளர்களுடன் இணைந்து தனது தாயகத்தை (இந்தியா) குறைத்து மதிப்பிட்டால், அமெரிக்காவையோ அல்லது எனது பார்வையையோ உண்மையாக ஆதரிக்க முடியாது. உங்கள் சொந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லதுஅ ராகுல்”என்று கூறியதாக வைரலாகும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் விவகாரத்தில் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் மீது பாஜக பகிரங்கமாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே ராகுல் காந்தியை ஜார்ஜ் சோரோஸின் ஏஜென்ட் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இப்பதிவு டொனால்ட் ட்ரம்பின் போலி கணக்கில் இருந்து பதிவிடப்பட்டது தெரியவந்தது.
இப்பதிவு குறித்து அறிய வைரலாகும் பதிவில் உள்ள thedonaldtrumph (Archive) என்ற எக்ஸ் பக்கம் குறித்து ஆய்வு செய்தோம். அப்போது, Donald J. Trump Parody என்ற பெயரில் இப்பக்கம் இயங்கி வருவது தெரிந்தது. மேலும், “அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியின் ரசிகர் பக்கம், AshwiniSahaya (Archive) என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது” என்று அப்பக்கத்தின் பயோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் இக்கணக்கு போலிக் கணக்கு என்று தெரியவந்தது.
அதேபோன்று, வைரலாகும் பதிவு கடந்த நவம்பர் 6ஆம் (Archive) தேதி இப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Archive) டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கும், ஜஸ்டின் ட்ரூடோ இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் அவர் காலிஸ்தானிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறி இதே கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இறுதியாக டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கமான realDonaldTrump (Archive) பக்கத்தில் ஆய்வு செய்ததில், தனக்கு வாழ்த்து தெரிவித்த யாருக்கும் அவர் மீண்டும் நன்றி தெரிவித்து பதிவிடவில்லை என்பது தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக ராகுல் காந்தியை ஜார்ஜ் சோரோஸின் ஏஜென்ட் என்று குறிப்பிட்டு டொனால்ட் டிரம்ப் பதிவிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் எக்ஸ் பதிவு டொனால்ட் ட்ரம்பின் போலி கணக்கில் இருந்து பதிவிடப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.