ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒன்றிய அரசு பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்நிலையில், “இந்த டிரம்ப் இருக்காரே, நக்கல் புடிச்ச மனுஷன். பாக்கிஸ்தான் சிந்து தண்ணீர் வேணும் என்று அமெரிக்கா கிட்ட கெஞ்சியதை, எப்படி நக்கல் பன்றார் பாருங்க மக்களே. நமது பிரதமரின் வலிமை இப்ப தெரியுதா” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் “Ha… Ha… I need water. Help me, i need water. Help” என்று கூறிவிட்டு வாட்டர் கேனில் இருக்கும் தண்ணீரை குடித்து கேலி செய்வது போன்று காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் 2016ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் செனட்டர் மார்க்கோ ரூபியோவை கேலி செய்தபோது எடுக்கப்பட்ட காணொலி என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலி குறித்து கண்டறிவதற்காக இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி CNN ஊடகம் வைரலாகும் அதே காணொலியை வெளியிட்டுள்ளது. அதன் டிஸ்கிரிப்ஷன் பகுதியில், “2013ஆம் ஆண்டு ஸ்டேட் ஆஃப் தி யூனியனின் போது மார்கோ ரூபியோ (செனட்டர்) பதிலளித்த போது பேச்சின் நடுவில் தண்ணீர் குடித்தார். இதனை டொனால்ட் ட்ரம்ப் கேலி செய்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், NBC ஊடகம் வெளியிட்டுள்ள அதே காணொலியில் பேசும் டொனால்ட் ட்ரம்ப், “அதிபர் ஒபாமாவின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து பேசிய மார்க்கோ, Ha… Ha… I need water. Help me, i need water. Help” என்றார். தொடர்ந்து, வாட்டர் கேனில் இருக்கும் தண்ணீரை குடித்துவிட்டு “It's Rubio” என்கிறார் கேலியாக.
மேலும், தேடுகையில் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி ABC News, “தண்ணீர் அருந்துவதற்காக பேச்சை நிறுத்திய மார்கோ ரூபியோ” என்ற தலைப்பில் மார்கோ ரூபியோ பேச்சின் போது தண்ணீர் அருந்திய காணொலியை வெளியிட்டுள்ளது. இதனையே டொனால்ட் ட்ரம்ப் கேலி செய்து பேசியுள்ளார் என்பதும் தெரியவந்தது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் சிந்து நதிநீர் வேண்டுமென்று பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கெஞ்சியபோது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தானை கேலி செய்ததாக வைரலாகும் காணொலி 2016ஆம் ஆண்டு செனட்டர் மார்க்கோ ரூபியோவை டொனால்ட் ட்ரம்ப் கேலி செய்த போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.