“மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் ராக்கெட் தேவையா என்று கேட்டீர்கள். இப்போ வெள்ளியில் பீரோ தேவையா” என்ற கேப்ஷனுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வெள்ளி அலமாரியை திறந்துகாட்டும் காணொலி காட்சி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. வெள்ளி அலமாரியை துர்கா ஸ்டாலின் விலைக்கு வாங்கியது போன்று கூறி இக்காணொலியை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் உண்மையில் இது கின்னஸ் உலக சாதனை நிகழ்வின் போது எடுக்கப்பட்ட காணொலி என்றும் தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியை ஆய்வு செய்தோம். அதில், விகடன் ஊடகத்தின் லோகோ இருந்தது. இதனைக் கொண்டு விகடனின் சமூக வலைதளங்களில் தேடியபோது, “பிரமாண்ட தூய வெள்ளி அலமாரி! பாரம்பரிய இந்திய ஓவிய பாணி கின்னஸ் உலக சாதனை” என்ற தலைப்பில் வைரலாகும் அதே காணொலியை விகடன் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இது கின்னஸ் உலக சாதனை நிகழ்வு என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, இது தொடர்பாக DT Next கடந்த 24ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “40 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளிப் பொருட்கள் விற்பனை செய்துவரும் சென்னையைச் சேர்ந்த சுக்ரா நகைக் கடை உலகின் மிகப்பெரிய வெள்ளி அலமாரியை உருவாக்கி கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. இதனை துர்கா ஸ்டாலின் திறந்துவைத்தார்.
ஏழடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட அலமாரி 158.78 கிலோகிராம் எடையும், 92.5 சதவீத வெள்ளியைக்கொண்டு கைகளால் உருவாக்கப்பட்டது. தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் வடிவமைப்புத் தலைவர் நிதின் கல்கிராஜுவின் மேற்பார்வையின் கீழ், பன்னிரெண்டு வெள்ளிக் கலைஞர்கள் கொண்ட குழு, 6,900 மனித நேரங்களுக்கு மேல் எடுத்து, தலைசிறந்த படைப்பை நிறைவு செய்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கின்னஸ் சாதனை இணையத்தளத்திலும் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
DT Next வெளியிட்டுள்ள செய்தி
Conclusion:
முடிவாக, நம் தேடலில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சொந்தமாக வெள்ளி அலமாரி ஒன்றை வாங்கியது போன்று வைரலாகும் காணொலி உண்மையில் சென்னையைச் சேர்ந்த சுக்ரா நகைக் கடை உலகின் மிகப்பெரிய வெள்ளி அலமாரியை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.