லுப்போ கேக்கில் குழந்தைகளை முடக்கும் மாத்திரைகள் உள்ளதாக பரவி வரும் காணொலி போலியானது!
லுப்போ கேக் உண்டால் குழந்தைகளை முடக்கும் என்று பேஸ்புக்கில் பரவி வரும் காணொலி போலியானது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடிகிறது.
By Ahamed Ali Published on 27 Sept 2022 1:59 PM IST"எச்சரிக்கை..! சகோ… LUPPO லுப்போ என்ற பெயரில் ஒரு வகை "கேக்" சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதில் இரண்டு சிறிய மாத்திரைகள் உள்ளது. அது குழந்தைகளை முடக்கும் டேப்லெட்(மாத்திரை) என்று சிலர் சொல்கிறார்கள். தயவுசெய்து, இந்த வீடியோவை பார்த்து புரிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும், இது பள்ளிக்கூடம் பகுதியில் மட்டுமே விற்கப்படுகிறது என்றும் தகவல் வருகிறது.
இதுபோன்ற சந்தேகமானவற்றை உங்கள் குழந்தைகள் வாங்கித் திண்ணாமல், கவனமாய் பார்த்து கொள்ளுங்கள்" என்று 30 மற்றும் 51 விநாடிகள் ஓடக்கூடிய காணொலியில் ஒரு நபர் 'லுப்போ' என்று பெயரிடப்பட்ட சிறிய அளவிலான கேக் ஒன்றை கவரில் இருந்து எடுத்து பிரித்துக் காட்டுக்கிறார். அதன் உள்ளே இரண்டு மாத்திரைகள் உள்ளன. இந்த காணொலி தற்போது பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.
Fact-check:
பகிரப்பட்டு வரும் இக்காணொலியின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிய முயற்சித்தோம். அதன்படி, காணொலியில் உள்ள லுப்போ கேக் (Luppo cake) குறித்த தகவல்களை கூகுளில் தேடிய போது, இக்கேக்கில் முடவாத மாத்திரைகள் இருப்பதாகக் கூறி இதற்கு முன்னர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பகிரப்பட்டு வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக ஸ்னோப்ஸ்(Snopes) எழுதியுள்ள கட்டுரையின் படி, பகிரப்படும் காணொலியில் உண்மையில்லை என 'சோலன்(Sölen)' (லுப்போ கேக் தயாரிக்கும் துருக்கிய நிறுவனம்) அதிகாரிகள் குறிப்பிட்டிருப்பதை காண முடிகிறது.
ஸ்னோப்ஸ் இணையதளத்தின் பதிவு
அதே கட்டுரையில், சோலன் ஆலைகளின் உற்பத்தி செயல்முறை, மாசுபாடு பாதுகாப்புகள், பாதுகாப்பு சான்றிதழ்கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. மேலும், லுப்போ கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பல்வேறு கட்ட வடிகட்டுதல் அமைப்புகள் உயரம் அல்லது அகலத்தில் 700 மைக்ரான்களுக்கும் அதிகமாக இருக்கக்கூடிய துகள்களைத் தடுக்கின்றன என்றும் 'சோலன்' நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார். இவற்றின் மூலம் காணொலியில் காட்டப்பட்டுள்ளபடி எந்த பொருளும் லுப்போ கேக்கினுள் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. அதுமட்டுமின்றி, இத்தயாரிப்பு ஈராக்கில் மட்டுமே விற்கப்படுகிறது.
'டெயிட்(Teyit)' என்ற துருக்கிய ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையின் படி, "கேக் மேற்பரப்பில் உள்ள துளையிடப்பட்ட அடையாளங்கள், பேக்கிங்கை திறப்பதற்கு முன்பு கேக்கில் யாரோ ஒருவரால் மாத்திரைகள் சொருகப்பட்டதைக் குறிக்கிறது" என்று கூறியுள்ளது. தொடர்ந்து, காணொலியின் கீஃப்ரேம்களைக் கொண்டு ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்ததில், 2019-ம் ஆண்டு யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட இதே காணொலியை நம்மால் காண முடிந்தது. இதன் மூலம் இது பழைய காணொலி என்று தெரிகிறது.
Conclusion:
இவற்றைக் கொண்டு வைரலாகும் காணொலியில் உள்ள லுப்போ கேக்குகள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விற்கப்படவில்லை என்பதை உறுதிபடுத்த முடிகிறது. மேலும், லுப்போ கேக்கை சாப்பிட்ட பிறகு குழந்தைகளுக்கு பக்கவாதம் வரும் என்பதும் வதந்தி என்பதை ஆதாரப்பூர்வமாக உறுதிபடுத்த முடிகிறது.