கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக - பாஜக இடையே கூட்டணி உருவானதாக அமித்ஷா அறிவித்தார். இந்நிலையில், “கடந்த வாரம்... அமித்ஷாவை சந்திக்கும் முன்பு... என் தலைவன் கெத்து காட்டிய தருணம் அமித்ஷாவை சந்தித்தார். தமிழகத்தின் சிறுபான்மையினரின் காவலன் எங்கள் அய்யா எடப்பாடி அவர்கள்” என்ற கேப்ஷனுடன் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
அதில், எடப்பாடி பழனிச்சாமியின் சட்டை பையில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இருப்பது போன்று உள்ளது. இதன் மூலம் அமித்ஷாவை சந்திக்கச் செல்லும்போது அவர் இவ்வாறு பிரதமர் மோடியின் புகைப்படத்தை தனது சட்டை பையில் வைத்துக் கொண்டதாக கூறி பல்வேறு கேப்ஷனுடன் இப்புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, 2017ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி Pincha Seruppu என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் அதே புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. மேலும் அதில், “மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் "ஓகி" புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று (19.12.2017) கன்னியாகுமரிக்கு வருகை தந்த போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் வரவேற்றார்கள். இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உடனிருந்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இரு புகைப்படத்தின் வேறுபாடு
கிடைத்த புகைப்படத்தை கொண்டு ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உண்மையான புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. அதனை ஆய்வு செய்கையில் அதில் எடப்பாடி பழனிச்சாமியின் சட்டை பையில் ஜெயலலிதாவின் புகைப்படம் இருப்பது தெரியவந்தது. இதனைக் கொண்டு வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
PIB தனது எக்ஸ் பக்கத்தில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி பிரதமர் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமியின் மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. அதிலும் தெளிவாக ஜெயலலிதாவின் புகைப்படம் எடப்பாடி பழனிச்சாமியின் சட்டைப் பையில் இருப்பது தெரிகிறது.
மேலும், 2017ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி The News Minute வெளியிட்டிருந்த செய்தியின் படி, “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை மார்பிங் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், 24 வயது கல்லூரி மாணவர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று உறுதி ஆகிறது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் சட்டை பையில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இருப்பதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.