ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக, நாதக உள்பட பல்வேறு கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இது ஒருபுறமிருக்க சமீப காலமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், “ஈரோட்டில் தேர்தல் விதிகளின் காமராஜர் சிலையை மூடிய அதிகாரிகள் ஈவேரா சிலையை ஏன் மூடவில்லை! ஈவெரா புகைப்படத்தை பயன்படுத்தி திமுக வாக்கு கேட்கும் நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறுகிறதா தேர்தல் ஆணையம் ?” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் (Archive) பெரியாரின் சிலை மூடப்படாமல் இருப்பது போன்ற புகைப்படத்தை நாதகவினர் பரப்பி வருகின்றனர்.
பொதுவாக தேர்தல் அறிவிக்கப்பட்டால் அன்றைய நாளிலிருந்து தேர்தல் நடைபெற்ற முடியும் வரை பொது இடங்களில் இருக்கும் கட்சித் தலைவர்களின் சிலைகள் மூடப்படுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி வழக்கம். அந்த வகையில் பெரியாரின் சிலையை ஏன் மூடவில்லை என்று நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வைரலாகும் பதிவு
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி பெரியாரின் சிலையை மூடத் தேவையில்லை என்று தெரியவந்தது.
இத்தகவலின் உண்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2024ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி நக்கீரன் ஊடகம் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், வளைவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்படுவது வழக்கம். இவ்வாறு மூடப்படும் சிலைகளில் பெரியார் சிலைகள் அடங்காது.
நக்கீரன் வெளியிட்டுள்ள செய்தி
இது தொடர்பாக கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, நீதிபதி வி. பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப்பளித்து இவ்வழக்கை முடித்து வைத்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக India Kanoon இணையதளத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிட கழகம் தொடுத்த வழக்கு குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தந்தை பெரியாரின் சிலை எதிர்காலத்தில் மூடப்படக் கூடாது என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் நிலையான நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அதைப் பதிவு செய்து, இந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி வி. பார்த்திபன் தீர்ப்பளித்துள்ளார்.
India Kanoon இணையதளத்தில் உள்ள வழக்கு விபரம்
Conclusion:
முடிவாக நம் தேடலில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவிற்கு ஆதரவாக பெரியாரின் சிலையை மூடாமல் வைத்துள்ள தேர்தல் ஆணையம் என்று வைரலாகும் தகவல் தவறானது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பெரியாரின் சிலை மூடப்பட வேண்டியதில்லை என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.