Fact Check: ஒரு பாறைக்கு மேல் மூன்று கற்கள்! நர்மதா நதியில் அடுக்கப்பட்டுள்ளதாக வைரலாகும் தகவல் உண்மையா?

ஒரு பாறைக்கு மேல் மூன்று கற்கள் அடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  28 Nov 2024 11:57 AM GMT
Fact Check: ஒரு பாறைக்கு மேல் மூன்று கற்கள்! நர்மதா நதியில் அடுக்கப்பட்டுள்ளதாக வைரலாகும் தகவல் உண்மையா?
Claim: நர்மதா நதியில் ஒரு பாறையும் அதற்கு மேல் மூன்று கற்களும் ஒன்றன் மீது ஒன்றாக நிற்கிறது. இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது
Fact: இந்த தகவல் பொய்யானது. புவியீர்ப்பு விசையின் அறிவியலைப் கொண்டு பாறைகளை அடுக்கும் கலை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது


“இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது. ஓடும் நர்மதா நதியில் (நர்மதா பரிக்கிரமா செல்லும் வழியில்) ஒரு பாறையும் அதற்கு மேல் மூன்று கற்களும் ஒன்றன் மீது ஒன்றாக நிற்கின்றன. வெள்ளத்தின் போதும் பாறைகள் நிலையாக நிற்கும்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.

அதில், ஓடும் நதிக்கு அருகே ஒரு செங்குத்தான பாறைக்கு மேலே மூன்று வட்ட வடிவ பாறைகள் எவ்வித ஆதரவும் இன்றி நிற்கிறது. இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்றும் இந்தியாவில் உள்ள நர்மதா நதியில் இது போன்று அமைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.




Fact-check:

நியூஸ் மீட்டர் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் காணொலியில் இருப்பது பாறைகளை சமநிலையுடன் அடுக்கும் ஒரு வகை கலை என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Mitch Summers என்ற பேஸ்புக் பக்கத்தில் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி, Michael Grab என்பவர் 12 ஆண்டுகளாக பாறைகளை அடுக்குவதாக (Rock Balancing) காணொலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அவர் வைரலாகும் காணொலியில் இருப்பது போன்று பல்வேறு வகையான பாறைகளை அடுக்கி காட்டுகிறார்.




அவற்றை அடுக்குவதற்கு பசை போன்றவற்றை பயன்படுத்துவதில்லை என்றும் மாறாக புவியீர்ப்பு விசையின் உதவியுடன் அவற்றை அடுக்குவதாகவும் கூறுகிறார். Gravity Glue என்ற சமூக வலைதளப்பக்கங்களில் Michael Grab பாறைகளை அடுக்கும் காணொலிகளை பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, தேடுகையில் வைரலாகும் காணொலியில் உள்ளது போன்ற அதே பாறையை தான் கொலராடோவின் பவுல்டர் என்ற இடத்தில் அடுக்கியதாக புகைப்படம் ஒன்றை Gravity Glue இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிட்டுள்ளார்.

பாறைகளை சமநிலைப்படுத்தும் இயற்பியல் செயல்முறையை Grab விவரிக்கும் போது, "அடிப்படையில் அவை ஒன்றையொன்று பூட்டிக்கொள்ளும் புள்ளிகளைத் தேடுகிறது", மேலும் கற்களுக்கு இடையே மூன்று தொடர்பு புள்ளிகள் தேவை என்று கூறுகிறார், பாறையின் நிறை மையம் (Centre of Gravity) அந்த புள்ளிகளுக்கு இடையில் இருக்க வேண்டும் என்கிறார். இவரைப் போலவே ஜப்பானைச் சேர்ந்த Ishihana-Chitoku என்பவரும் பாறைகளை சமநிலையுடன் அடுக்கும் கலையில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் நர்மதா நதியில் ஒரு பாறையும் அதற்கு மேல் மூன்று கற்களும் ஒன்றன் மீது ஒன்றாக நிற்பதாகவும் அது அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்று வைரலாகும் தகவல் தவறானது. உண்மையில் அது புவியீர்ப்பு விசையின் அறிவியலைப் கொண்டு பாறைகளை அடுக்கும் கலை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.





Claim Review:அறிவியலுக்கு அப்பாற்பட்டு நர்மதா நதிக்கரையில் கற்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தி
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:இந்த தகவல் பொய்யானது. புவியீர்ப்பு விசையின் அறிவியலைப் கொண்டு பாறைகளை அடுக்கும் கலை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது
Next Story