கோவை பெட்ரோல் குண்டு வீச்சுடன் தொடர்புபடுத்தப்படும் எபிபி நாடு நியூஸ் கார்ட் போலியானது!
சமூக வலைதளங்களில் பரவி வரும் எபிபி நாடு நியூஸ் கார்டிற்கும் தற்போதைய பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
By Ahamed Ali Published on 26 Sept 2022 12:31 AM ISTசெப்டம்பர் 23-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் ரகு என்ற இந்து முன்னணி பொறுப்பாளர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதேபோல, அன்றைய தினமே காலை 11 மணியளவில் குனியமுத்தூர் பகுதியில் உள்ள பாஜக பிரமுகர் பரத் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஒவ்வொரு வழக்கிலும் மூன்று தனிப்படைகள் அமைத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், "இன்று இந்த வழக்கில் தொடர்புடைய மதுக்கரையைச் சேர்ந்த ஜேசுராஜ்(34), குனியமுத்தூரைச் சேர்ந்த இலியாஸ்(34) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் இரண்டு நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள். மேலும், இவர்கள் இருவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளாக உள்ளனர். விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவர்" என்று இன்று(செப். 25) கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இச்சூழலில், "குண்டு வீச சொன்னதே அண்ணாமலை தான்" என்ற தலைப்பில், "பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச சொன்னதே அண்ணாமலை தான். இருவருக்கும் இடையேயான தொலைபேசி அழைப்பு பதிவை போலீசாரிடம் ஒப்படைத்தார் கருக்கா வினோத். தேர்தலுக்காக வீசியதாக வாக்குமூலம்" என்று பிப்ரவரி மாதம் 10-ம் தேதி எபிபி நாடு இணைய ஊடகம் செய்தி வெளியிட்டதாக நியூஸ் கார்ட் ஒன்று பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது, கோவையில் நடைபெற்றுள்ள பெட்ரோல் குண்டு வீச்சை தொடர்புபடுத்தி இந்த நியூஸ் கார்ட் பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
இந்நிலையில், இது குறித்த உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டில் உள்ள தலைப்பைக் கொண்டு கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தந்தி டிவியில் ஒளிபரப்பான காணொலி யூடியூப் தளத்தில் இருந்தது. அதில், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான 'கமலாலயத்தில்' பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்ததாக செய்தி ஒளிபரப்பானது. தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத், நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக நிலைப்பாடு தனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், அதைக் கண்டித்து பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசினேன் எனக் காவல்துறையினரிடம் கூறியதாக அச்செய்தியில் 55 நொடியில் துவங்கி 1 நிமிடம் 7 விநாடிக்குள் பதிவாகி உள்ளது.
இதுமட்டுமின்றி, எபிபி நாடு இணைய ஊடகம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், "குண்டு வீச சொன்னதே அண்ணாமலை தான்" என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் தகவல் போலியானது என்று பதிவு செய்துள்ளனர்.
Conclusion:
இதன் மூலம் பரவி வரும் நியூஸ் கார்டிற்கும், கோவை பெட்ரோல் குண்டு வீச்சிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரிகிறது. மேலும், பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டே போலி என்பதையும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது. எனவே சமூக வலைதளப் பயனர்கள் இதனை மேலும் பகிராமல் இருக்கும் படி நியூஸ்மீட்டர் கேட்டுக்கொள்கிறது.