"உடன்கட்டை ஏறுதல் உலகிற்கே முன்மாதிரி" என்ற தலைப்புடன், "உடன்கட்டை ஏறுதல் தமிழர்களின் கலாச்சாரம். கணவன் இறந்த உடனேயே பெண்கள் தாமதிக்காமல் உடன்கட்டை ஏறவேண்டும். தமிழர் கலாச்சாரத்தை மீட்கவேண்டும். சனாதனத்தில் உடன்கட்டை ஏறுதல் போன்ற சிறப்பான நடைமுறைகள் இருந்ததால்தான், பாரத கலாச்சாரம் உலகிற்கே முன்மாதிரியாக இருந்து வழிநடத்தியது" என்று பாஜகவின் மாநிலத் துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக தந்தி டிவி நியூஸ்கார்ட் ஒன்று
சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் நியூஸ் கார்ட்
Fact-check:
இதன் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, "தமிழ் பெண்கள் உடன்கட்டை ஏறவேண்டும். உடன்கட்டை ஏறுதல் தமிழர்களின் பாரம்பரியம்" என்று நாராயணன் திருப்பதி கூறியதாக நியூஸ் 7 செய்தி நிறுவனத்தின் போலி நியூஸ் கார்ட் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம்
வைரலானது தெரிய வந்தது. மேலும், தற்போது பரவும் செய்தியைப் போன்று எந்த ஒரு செய்தியையும் தந்தி டிவியோ அல்லது வேறு எந்த செய்தி நிறுவனங்களோ வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து தேடுகையில், "அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சி.வி. சண்முகம், பாஜகவுடன் திமுக கூட்டணி வரும் என்றும், திமுகவும், பாஜகவும் ஒன்று என்றும் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பா.ஜ.க. குறித்த விமர்சனங்களை தவிர்ப்பார் என்று கருதுகிறேன்" என்று கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பே அவர் தொடர்பாக
வெளியான கடைசி செய்தி என்பதை நம்மால் கூற முடிகிறது.
மேலும், பரவும் செய்தி பொய் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக நாராயணன் திருப்பதி தனது
ஃபேஸ்புக் பக்கத்தில் தற்போது வைரலாகி வரும் தந்தி டிவியின் நியூஸ் கார்டுடன், "தரம் தாழ்ந்த சிலர், ஈன புத்தியுடைய சிலர் இது போன்ற போலி செய்திகளை பரப்புகின்றனர். பரப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
Conclusion:
நமது தேடலின் மூலம் கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், உடன்கட்டை ஏறுதலை பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆதரித்தது போன்று தந்தி டிவி நியூஸ் கார்ட் வெளியிட்டதாக பகிரப்படும் தகவல் உண்மையானது அல்ல என்றும், அது போலி என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.