தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுகின்றனரா: மீண்டும் பரவும் வதந்திகள்!

தமிழ்நாட்டில், வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக மீண்டும் சமூக வலைதளங்களில் பல்வேறு காணொலிகள் வைரலாகி வருகின்றன

By Ahamed Ali  Published on  12 March 2023 2:17 PM GMT
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவும் வதந்தி

தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் அவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடமாநிலங்களில் வதந்தி பரவியது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு மத்தியில் பெரும் பீதியும், பயமும் நிலவியது. இந்நிலையில், அவை அனைத்தும் பொய் செய்திகள் என்று நியூஸ்மீட்டர் ஏற்கனவே கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதனையடுத்து, மீண்டும் தற்போது வட மாநில தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்திகள் பரவி வருகின்றன.

Fact-check:

பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள் என்று சில வடமாநில தொழிலாளர்கள் முகத்திலும், நெற்றியிலும் கட்டுப்போட்டிருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் காணொலி சமூக வலைதளங்களில்(Archive link) வைரலாகி வருகின்றன. இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய அவற்றை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ரெட்டிட் இணையதளத்தில் "பீகார் தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப்பட்டனர்" என்ற போலி வீடியோவை பாஜக பரப்பியுள்ளது. தமிழ்நாடு காவல்துறை அதை முறியடித்துள்ளது என்று வைரலாகும் புகைப்படத்தின் முழு நீள காணொலி பதிவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து தேடுகையில், 2023ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி BNR News Reporter Honey என்ற யூடியூப் சேனல் இதே காணொலியை பதிவிட்டுள்ளது. மேலும், அதன் விளக்கப் பக்கத்தில், "பிரபல செய்தி ஊடகங்களில் வெளியான வைரல் வீடியோக்களின் தாக்கத்தினால் இக்காணொலி கற்பனையாக எடுக்கப்பட்டது. வைரல் வீடியோக்கள் பற்றிய அறிவையும் தகவலையும் வழங்குவதே எங்களது ஒரே நோக்கம். இதை உண்மையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்று பொறுப்பு துறந்துள்ளனர்.


பொறுப்பு துறந்துள்ள யூடியூப் சேனல்

தமிழ்நாட்டு காவல்துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், "இந்த காணொலியில் கூறப்பட்டுள்ளது போல எந்த சம்பவமும் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. இது போலியானது. இது குறித்து தமிழ்நாடு காவல்துறை சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறையின் டுவிட்

மேலும், "தமிழ்நாட்டை விட்டு ஓடும் பீகாரிகளுக்கு இப்படித்தான் டிடி டிக்கெட் கொடுக்கிறார்கள். டிடியின் இந்த நடத்தை சரியா, அவர் சீருடை கூட அணியவில்லை" என்று 26 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று வைரலாகி வருகிறது(Archive link). இதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி "Run on Track" என்ற யூடியூப் சேனலில் "சம்பூர்ணா கிராந்தி விரைவு ரயிலின் நிலை இதுதான்" என்று இந்தி தலைப்புடன் பரவக் கூடிய காணொலியின் முழு நீளக் காணொலி கிடைத்தது. அதில், 15வது நிமிடத்திற்கு மேல் பரவக் கூடிய பகுதி உள்ளது. சம்பூர்ணா கிராந்தி விரைவு ரயில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகரிலிருந்து புது டெல்லி வரை இயக்கப்படுகிறது. இதன் மூலம் அக்காணொலி தமிழ்நாட்டில் நடந்ததில்லை என்பது உறுதியாகிறது.

யூடியூப் காணொலி

Conclusion:

இறுதியாக, நமக்கு கிடைத்து இருக்கக்கூடிய ஆதாரங்களில் அடிப்படையில் பகிரப்படும் யாவும் தமிழ்நாட்டில் நடந்தவை இல்லை என்றும் அவை வதந்திகள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:Videos claiming that migrant labours in Tamilnadu are being threatened by Tamilans
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, Twitter
Claim Fact Check:False
Next Story