துக்ளக்கின் 54வது ஆண்டு விழா கடந்த ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பேசிய துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறிய போது, தான் முதல்வர் வேட்பாளர் இல்லை என்றும் அண்ணாமலை தான் முதல்வர் வேட்பாளர்” என தன்னிடம் ரஜினிகாந்த் கூறியதாக தெரிவித்தார்.
இந்நிலையில், “முதல்வர் பதவி குறித்தோ அண்ணாமலை குறித்தோ ஆடிட்டர் குருமூர்த்தியுடன் எப்போதும் விவாதித்தது இல்லை. அவரது கருத்து மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது” என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்ததாக ஒன் இந்தியா தமிழின் ஜனவரி 15ம் தேதியிட்ட நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய முதலில் நடிகர் ரஜினிகாந்த் அவ்வாறாக பேட்டியளித்தாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Malaimurasu TV கடந்த ஜனவரி 15ஆம் தேதி, “ரசிகர்களுக்கு ரஜினி பொங்கல் வாழ்த்து” என்ற தலைப்பில் காணொலி ஒன்றை பதிவிட்டிருந்தது.
அதில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். அனைவரும் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒழுக்கம் மற்றும் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் இருக்கும்” என்று மட்டுமே கூறியுள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி குறித்து எந்த ஒரு பதிலும் அவர் தெரிவிக்கவில்லை.
மேலும், இது குறித்து ஒன் இந்தியா தமிழின் சமூக வலைதளப்பக்கங்களில் ஜனவரி 15ஆம் தேதிக்கான பதிவுகளைத் தேடியதில் அன்றைய தினம் எந்த ஒரு நியூஸ்கார்டையும் ஒன் இந்தியா தமிழ் பதிவிடவில்லை என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் தற்போது நியூஸ்கார்டின் அமைப்பை மாற்றியுள்ளதும் தெரியவந்தது. வைரலாகும் நியூஸ்கார்ட் பழைய அமைப்பில் இருப்பதும் தெரிகிறது.
ஒன் இந்தியா தமிழ் நியூஸ்கார்ட் அமைப்பு
மேலும், “அண்ணாமலை முதல்வரா?.. ரஜினிக்கு தெரியுமா.. 'சோ' வாக மாற்றிவிடாது.. குருமூர்த்தியை சாடிய எஸ்.வி சேகர்” என்ற தலைப்பில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி ஆடிட்டர் குருமூர்த்தி தொடர்பான ஒரு செய்தியை மட்டுமே வெளியிட்டுள்ளது ஒன் இந்தியா தமிழ்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, முதல்வர் பதவி குறித்தோ அண்ணாமலை குறித்தோ ஆடிட்டர் குருமூர்த்தியுடன் எப்போதும் விவாதித்தது இல்லை என்று ரஜினிகாந்த் கூறியதாக வைரலாகும் ஒன் இந்தியா தமிழின் நியூஸ்கார்ட் போலியானது என்றும், அவ்வாறான கருத்தை ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.