13வது உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன. இதில், ஆஸ்திரேலியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மைதானத்தில் நின்றுகொண்டிருந்த போது ரசிகர்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷமிட்டதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த நவம்பர் 4ஆம் தேதி ஒரு யூடியூப் சேனலில் வைரலாகும் அதே காணொலி ஷார்ட்ஸாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற கோஷம் எழுப்பப்படவில்லை.
மாறாக, ரசிகர்கள் அவர் பெயரைக்கூறி உற்சாகப்படுத்துகின்றனர். அதற்கு, அமைதியாக இருக்கும் படி சைகை செய்கிறார் டேவிட் வார்னர். இதன் முழு நீளக் காணொலியை RaoDharvikVlogs என்ற யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. அதில் வார்னரிடம், புஷ்பா பட பாணியில் நடனமாடும் படி ரசிகர்கள் கூறுகின்றனர். இறுதியாக அவரும் நடனமாடுகிறார். மேலும், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் செய்வது போல் வார்னர் பலமுறை செய்துள்ளார். அதன் காரணமாகவே அப்படிச் செய்யச் சொல்லி ரசிகர்கள் கேட்டுள்ளனர்.
எடிட் செய்யப்படாத காணொலி
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்து மைதானத்திலிருந்து பெவிலியனுக்கு நடந்து செல்லும்போது இந்திய ரசிகர்கள் சிலர் அவருக்கு எதிராக “ஜெய் ஸ்ரீராம்” முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
இறுதியாக, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரிடம் ரசிகர்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கமிட்டதாக வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்றும் அவ்வாறாக ரசிகர்கள் முழக்கமிடவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.